தர்மயுத்தம் பார்ட்- 2 இற்குத் தயாராகும் ஓ.பி.எஸ் அணி! – பதற்றத்தின் உச்சத்தில் ஈ.பி.எஸ் அணி

Loading...

ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தீபா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடி நடத்திய தர்ம யுத்தத்தில் (!) ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணி வெற்றி பெற்று இரட்டை இலைச் சின்னத்தையும் கட்சியையும் கைப்பற்றிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைந்திருந்தாலும், எடப்பாடி அணியால் பன்னீர்செல்வம் ஓரம்கட்டப்படுவதாகப் பேச்சு அடிபட்டது. இரு அணிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகச் செய்திகள் கசிந்தன.

இதனிடையே கடந்த அக்டோபர் 12-ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி குறித்து மோடியிடம் ஓ.பி.எஸ் கம்ப்ளைன்ட் செய்ததாக அரசியல் வட்டாரங்கள் யூகித்தன. இவை அனைத்தையும் ஓ.பி.எஸ் மறுத்து வந்தார். “நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கழகத்தைக் கட்டிக் காப்போம்” என்று ஓ.பி.எஸ் பேசி வந்தார்.

ஓ.பி.எஸ் பேச்சுகளைப் பொய்யாக்கும் விதமாக அவர் அணியினர் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.

இரு அணிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை முதலில் போட்டு உடைத்தவர் எம்.பி மைத்ரேயன். இவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் “ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் நிறைவுற்று இன்றோடு நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடிவிட்டன. மனங்கள்…” எனப் பதிவு செய்து இருஅணிகளுக்கிடையே உள்ள விரிசலை உறுதிப்படுத்தினார்.

மைத்ரேயனைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஹரி பிரபாகரன் இன்று காலை ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடி அணியைச் சாடி பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் ஓ.பி.எஸ் பெயரை புறக்கணித்து, எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நினைவுக் கம்பம் வைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

இவர்களைத் தொடர்ந்து ‘மனங்கள் உழண்டுகொண்டுதான் இருக்கும்போல’ என பன்னீர்செல்வம் அணியின் ஐ.டி பிரிவை சேர்ந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மெல்ல மெல்ல எடப்பாடி அணிக்கு எதிராக ஓ.பி.எஸ் அணியில் குரல் உயர்த்தி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புதான்.

தேர்தல் ஆணையத் தீர்ப்பில் என்னதான் இருக்கிறது?

இரட்டை இலை குறித்த தேர்தல் ஆணையத்தின் 83 பக்க தீர்ப்பில் மதுசூதனன், பன்னீர்செல்வம் ஆகியோரின் பெயர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருந்தாலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் முழு ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு இருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஓ.பி.எஸ் அணியின் இந்தத் திடீர் பல்டியும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பும் எடப்பாடி அணியை திக்குமுக்காட வைத்துள்ளது.

இன்று காலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கல்வெட்டில் பன்னீர்செல்வத்தின் பெயர் இல்லை என்று அவர் அணியினர் பொங்கிய அடுத்த சில மணிநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் என்று பெயர் பொறித்த கல்வெட்டைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் எடப்பாடி அணியினர்.

இந்நிலையில் மைத்ரேயன் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசியுள்ளார். எடப்பாடி அணி மீதான அதிருப்தி குறித்து முறையிடவே இந்தச் சந்திப்பு என்று அவரின் நெருங்கிய சொந்தங்கள் கூறுகின்றனர். இதே நிலை நீடித்தால் தர்மயுத்தம் பார்ட்-2 விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

– Vikatan

14Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*