ஈழத்து இயக்குனர் மதிசுதாவின் “உம்மாண்டி” திரைபட விமர்சனம்!

ஒருவாறு MaThi Sutha இன் உம்மாண்டி திரைப்படம் பார்த்தாச்சு . அம்மா இறந்ததன் பின்னர் திரையரங்கில் சென்று பார்த்த முதலாவது திரைப்படம் .அம்மா நல்ல திரைப்படங்களின் ரசிகை .ஆதலால் அம்மா இறந்த பின் படம் பார்க்கும் மனநிலை என்னிடம் இல்லை .நான் ஒரு அஜித் ரசிகன் .இல்லை இல்லை விஜய் ஐ கிண்டல் செய்யாத விஜய் இன் நல்ல படங்களை பார்க்கும் பாராட்டும் அஜித்தின் உண்மையான ரசிகன் அல்லது அஜித் பட வெறியன்.ஆனால் விவேகம் படம் கூட பார்க்கவில்லை இதுவரை .ஆனால் இந்த உம்மாண்டி என்னை திரையரங்கிற்கு அழைத்து சென்று விட்டது .

Loading...

சிறுவயதில் இருந்து ஒரே வகுப்பில் ஒன்றாக படிச்சு ஒன்றாக குதூகலித்த நண்பனின் படமாச்சே.இருபது வருட நட்பு . படம் நல்லதோ கூடாதோ , வெற்றியோ தோல்வியோ சுதாவை ஊக்கப்படுத்தணும்.எமது ஈழத்து கலைஞனை உற்சாக படுத்தணும்.இது தான் முதலில் நான் எடுத்த முடிவு .பேஸ்புக்கில் பல போஸ்ட்களை எழுதி எமது ஈழத்து கலைஞனை ஊக்குவிப்பிப்போம் படத்தினை வெற்றி பெற வைப்போம் என்று எழுதி விட்டு நான் படத்தினை பார்க்கவில்லை என்றால் எனது நட்பு போலியாகிவிடும் .நான் வாய் பேச்சு காரன் என்றாகி விடுமல்லவா .

இன்று தெல்லிப்பளை , மல்லாகம் பகுதிகளில் அடைமழை . எனது ஆருயிர் நண்பன் ரகுந்தன் தனது பிக்கப்பில் சரியாக 2 .22 க்கு எனது தற்போதைய இருப்பிடத்துக்கு வந்தான் .செம மழை 2.30 க்கு படம் தொடங்கி விடும் .ராஜா திரையரங்கிற்கு செல்வதற்கு 20 or 25 நிமிடங்கள் தேவை .8 நிமிடத்தில் போய் சேர வேண்டும் .சாத்தியமா ? எப்படியாவது படம் தொடங்க முதல் போய் சேருவது என்று முடிவு எடுத்தோம் . காங்கேசன் துறை வீதியால் பிக்கப் மழையையும் காற்றையும் கிழித்து கொண்டு சீறி பாய்ந்தது .2.25 க்கு சுதாவுக்கு கோல் பண்ணி கேட்டோம் மச்சான் வந்து கொண்டு இருக்காராம் சரியான நேரத்துக்கு படம் தொடங்கிடுமா என்று . இல்லை வாங்கோடா ஐந்து நிமிடம் லேட் ஆகும் என்று கூறினான் . சரியாக 2.32 க்கு திரையரங்கை அடைந்து விட்டோம் . பத்து நிமிடத்தில் போய் சேர்ந்து விட்டோம் என்றால் பாருங்கோவன் .

திரையரங்க வாயிலில் சுதா யாரோ வேறு நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்தான் .எங்களை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி உள்ள போங்கோ வாறன் என்று அனுப்பி வைத்தான் .டிக்கெட் எடுத்து கொண்டு உள்ளே போனோம் .என்னமோ நான் இயக்கி நான் நடித்த படத்தை பார்க்க செல்வது போன்ற ஒரு பரபரப்பு .உள்ளே நுழைந்ததும் எனக்கு ஒரு டவுட் மாறி மெர்சல் படம் போடும் அரங்கிற்குள் நுழைந்து விட்டோமா என்று .ஏன்னா அவ்வளவு சனம் அரங்கை நிறைத்து இருந்தது . ஒடிசி இல் நன்கு ஐந்து வரிசைகள் தவிர்ந்த மற்றைய அனைத்து வரிசையில் உள்ள ஆசனங்களும் நிறைந்து காண பட்டது .அதை பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சக்கட்டம் .அமர்ந்து இருந்தவர்களில் பலர் பேஸ்புக்கில் பார்த்த ஞாபகம் .அவர்கள் என்னை கண்டு பிடித்தார்களோ தெரியவில்லை .ஒருவாறு ஆசனத்தில் அமர்ந்து விட்டோம் .

சிறிது நேரத்தில் சுதா உள்ளே நுழைந்து தனக்கே உரிய தன்னடக்கத்துடன் எமது அனைவரினதும் ஆதரவுக்கு நன்றி கூறினான் . நன்றி கூறி முடித்ததும் படம் ஆரம்பம் ஆகியது .

சுதா தோன்றும் முதல் காட்சி . ப்ப்பா சொல்லவே வேணாம் .டாக்டர் காதாபாத்திரம் . ஒரு வைத்தியருக்கு உரிய அதே கம்பீரத்துடன் தோன்றி இருக்கையில் அமர்ந்து சாபத்தினை கழற்றி விட்டு தங்கையுடன் உரையாடும் காட்சி . நண்பன் என்பதற்காக புழுகவில்லை.உண்மையிலேயே அப்படி ஒரு கம்பீரம் .இலங்கை விஜய் சேதுபதி தான் .வைத்தியராக சுதாவை பார்த்ததும் பழைய வன்னியின் நினைவுகள் மனதில் ஊசலாடியது .சுதா விடுதலைப்புலிகளின் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தவன் .ஒரு வேளை இந்த பாழாய் போனா இறுதி யுத்தம் இடம் பெறாமல் விடுதலை புலிகளின் ஆட்சி நடந்து இருந்தால் சுதாவை இப்போது திரையில் வைத்தியராக பார்ப்பது போல தானே நிஜத்திலும் பார்த்திருப்போம் . சற்று மனதை உருக்கியது அவனது விதியை நினைத்து .

சுதாவின் வைத்தியர் கதாபாத்திரமும் கம்பீரமான தோற்றமும் என்னை வெகுவாக கவர்ந்து இழுத்தது மட்டுமல்லாமல் என்னை வெகுவாக பாதித்து விட்டது . படம் தொடர்கின்றது .ஒரு கிரைம் ஸ்டோரி .ஒரு கொலை அது கொலையா தற்கொலையா என்பதை தனது சிறப்பான நடிப்பு மற்றும் திரைக்கதை மூலமாக நேர்த்தியாக விறு விருப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தந்திருக்கின்றார் இயக்குனர் சுதா .

இனி இப்படத்தில் வரும் கதா பாத்திரங்களை சற்று அலசுவோம் .

மதி சுதா : –

சந்தேகத்திற்கு இடமில்லாத சிறந்த நடிப்பு .சிறந்த முக பாவனை .மனுஷன் பின்னி எடுத்திருக்கின்றார்

நடிகை லோஜி :-

இவரது குறும்படம் பார்த்துள்ளேன் . குறும்படம் பார்த்து இவரது நடிப்பு பிடித்து போனமையினால் நட்பு கோரிக்கை அனுப்பினேன் .அம்மணி இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை .லோஜியை பொறுத்தவரை இந்தப்படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனை என்றே கூறுவேன் . அறிமுக காட்சியில் ஆண்கள் பாவிக்கும் மோட்டார் சைக்கிளில் வந்து கம்பீரமாக காலை தூக்கி போட்டு இறங்கும் காட்சி இன்னமும் கண்களுக்குள் நிற்கின்றது .இவருக்கு இரண்டு கதா பாத்திரம் . ஒன்று உளவுத்துறை அதிகாரி .மற்றையது படித்த இளம் யுவதி .இரண்டு கதா பாத்திரங்களையும் வேறுபடுத்தி செவ்வனவே செய்திருக்கின்றார் . குறிப்பாக படித்த இளம் யுவதியாக வரும் கதா பாத்திரம் இவருக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறது .CID ஆக வரும் காதாபாத்திரையும் ஓரளவு செம்மையாக செய்திருக்கின்றார் . சந்தேக நபரை காலால் உதைத்து மிரட்டும் காட்சி கொள்ளை அழகு .

சுதாவின் தங்கையாக வரும் காதாபாத்திரம் :-

இவரது பெயர் எனக்கு ஞாபகம் வருதில்லை.ஆனால் இந்தியாவில் இடம்பெற்ற பேச்சு போட்டியில் பட்டையை கிளப்பி நடுவர்களை திகைப்பூட்டினர் என்று மட்டும் நினைவு உள்ளது . இவரது நடிப்பும் மனதில் பதிந்து கொண்டது .அண்ணண் சுதாவிடம் ஐஸ் கீரீம் கேட்டு கெஞ்சும் காட்சி ஆகட்டும் அண்ணனுடன் தொலைபேசியில் செல்லம் கொஞ்சும் காட்சி , இறுதியில் நெஞ்சு வழியில் துடி துடித்து இறந்த காட்சி அனைத்திலும் பின்னி எடுத்திருக்கின்றார் .நல்ல முக பாவனை .வாழ்த்துக்கள் நண்பி .

வைத்தியர் சுதாவுடன் வேளை புரியும் அலுவலர் Pranava Jothy : சிறிய கதாபாத்திரம் தான் எனிலும் தனது பங்கினை சரியாக செய்திருக்கின்றார் .உங்களிடம் நடிப்பு திறமையும் கம்பீரமான தோற்றமும் உள்ளது .முயற்சி செய்தால் பல வாய்ப்புக்கள் தேடி வரும்.

லோஜியின் நண்பராக வரும் நண்பன் கதாபாத்திரம் :-

சிறந்த நடிப்பு .இறுதியில் தற்கொலை செய்து இறக்கும் போது மனதில் பதிந்து விடுகின்றார் .

இசை : இசை அமைப்பாளர் ஷமீல் தரமான பின்னணி இசையை வழங்கியுள்ளார் . இறுதியில் வரும் பாடம் எனது கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது .

திரைக்கதை மற்றும் இயக்கம் : மதி சுதா இருக்கும் வளங்களை பயன்படுத்தி சரியான நடைமுறையில் இடம்பெறும் ஒரு கதை கருவை உருவாக்கி அதனை தந்து திறமை மூலம் திரைக்கதையில் தொய்வு ஏற்படாமல் இறுதிவரை விறு விருப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகர்த்தியுள்ளார் .வன்னியில் மருத்துவம் படிக்கும் போது கற்றுக்கொண்ட பல விடயங்களை இப்படத்தில் கூறி கைதட்டல்களை அள்ளி செல்கின்றார் .வைத்தியரின் வீட்டு நுழைவாயில் எழுதப்பட்டிருக்கும் ” இங்கு உள்ள நாய்கள் கடிக்காது ” “வெளியில் உள்ள மனிதர்கள் ஜாக்கிரதை ” இது ஒரு புதுமையான சிந்திக்க தூண்டும் சிந்தனை .கதை தேர்வு , லொகேஷன் செலக்சன் எல்லாமே பக்கா….

படத்தின் பிளஸ் :

1. மதி சுதா தனது திறமையான இயக்கம் மற்றும் நடிப்பின் மூலம் முதுகில் தாங்கி பிடித்துள்ளார் .

2. மற்றையது நடிகை லோஜி .இவரது இளம் யுவதியாக வரும் கதாபாத்திரம் மனத்தில் பதிந்து விட்டது.

3. மற்றைய பிளஸ் இசை அமைப்பாளர் ஷமீல் . சிறந்த background music .

படத்தின் மைனஸ் :-

1. இப்படத்தின் முக்கிய மைனஸ் என்னால் அது ஒலி தான் . பல வசனங்களை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை .குறிப்பாக லோஜியின் உயர் அதிகாரியாக வரும் காதாபாத்திரம் .அவர் ஏன்னா கதைத்தார் என்று புரியவே இல்லை. ஆங்கில subtitle பார்த்து தான் புரிந்து கொண்டேன் . லோஜி, சுதாவின் தங்கையாக வருபவர் கதைப்பது தெளிவாக உள்ளது .சுதா கதைப்பதும் சில வசனங்கள் புரியவில்லை .சில வசனங்கள் வாய்க்குள்ள கதைப்பது போன்று உள்ளது .

2. வசன உச்சரிப்பு : சுதாவாக இருக்கட்டும் லோஜியாக இருக்கட்டும் வாசன் உச்சரிப்பு இயல்பானதாக அவ்வளவு இல்லை .ஆனால் சுதாவின் தங்கையாக வருபவர் ஓரளவு அதனை செம்மையாக செய்துள்ளார் .இந்த உச்சரிப்பு பற்றி மிச்ச காசு குறும்படம் பார்த்த உடனே சுதாவிற்கு கோல் பண்ணி கூறினேன்.ஆனால் அவர் அதனை இன்னமும் 100 % கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை .

3. லோஜி இளம் யுவதியாக வரும் கதாபாத்திரத்தை 100 % செம்மையாக செய்துள்ளார் .ஆனால் CID ஆக வரும் காதாபாத்திரத்திற்கு கம்பீரம் போதவில்லை .மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கும் போது இருந்த கம்பீரம் , சந்தேக நபரை அடிச்சு மிரட்டும் போது இருந்த கம்பீரத்தை மற்றைய காட்சிகளில் காண முடியவில்லை .

Suggestion : –

சுதா அறிமுக காட்சியில் வரும் அந்த கம்பீரமான வைத்தியர் தோற்றத்தில் மேலும் சில காட்சிகளில் நடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .

படத்தின் நடுவில் ஒரு சிறிய 10 அல்லது 15 நிமிட இடைவேளை விட்டு இருந்தால் நேரம் இன்னும் கொஞ்சம் அதிகாமாக இருந்திருக்கும் .

படம் ஆரம்பிக்கும் முன்னர் மற்றும் இடை வேளையில் விளம்பரங்களை காட்சி படுத்தி இருந்தால் ஓரளவு நிதியை சம்பாதித்து இருக்க முடியும் .

Conclusion :

படம் பார்க்க போகும் போது குறும்படம் எடுத்த சுதா ஒரு முழுநீள திரைப்படத்தை முதலாவது கன்னி முயற்சியில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் எடுப்பாரா என்ற ஒரு டவுட் இருந்தது . குறும்படத்தில் இருந்து முழு நீள திரைப்படத்திற்கான transformation எவ்வாறு இருக்கும் என்று பல சந்தேகங்கள் இருந்தது .ஆனால் சுதா தான் பத்தொதோடு பதினொன்றாக இல்லாத சிறந்த படைப்பாளி என்பதனை நிரூபித்து விட்டார் .

ஒன்று மட்டும் சொல்லுவேன் மதி சுதா மற்றும் லோஜி மிஸ்கின் , பாலா, அமீர் போன்ற இயக்குனர்களின் கையில் சிக்கினால் இவர்களது எதிர்காலம் எங்கயோ போய் விடும் . மதி சுதா சிறந்த இயக்குனர் மட்டும் அல்ல மிக சிறந்த நடிப்பாற்றல் உள்ளவர் என்பதை இன்று புரிந்து கொண்டேன் . அதே போல லோஜி அழகான பெண் .குடும்ப கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்த கூடிய ஒருவர் . இவருக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் உள்ளது .அதே போல சுதாவின் தங்கையாக வந்த நண்பி அவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நிச்சயம் எதிர்காலத்தில் பிரகாசிப்பர் . பிரணவ ஜோதி நீங்க முயற்சி செய்தால் நீங்களும் சிறந்த குணசித்திர நடிகராக வர 100 % வாய்ப்பு உள்ளது .

இன்று ஒன்று மட்டும் புரிந்து கொண்டேன் . ஒரு திரைப்பட இயக்குனர் , ஊடகவியலாளர் இருவருக்கும் பரந்துபட்ட அறிவு இருக்க வேண்டும் . அது மதி சுதாவிடம் தாராளமாக உள்ளது . மனுஷன் ஏகப்பட்ட விடயங்களை தெரிந்து வைத்துள்ளார் . சிறுவயதில் வன்னியில் கடையில் பாண் சுற்றி தரும் பேப்பரை கூட பத்திரப்படுத்தி வைத்தது அப்போது ஏன் என்று எமக்கு தெரியவில்லை .இன்றைக்கு புரிந்து கொண்டேன். இவரை நம்பி எதிர்காலத்தில் நிச்சயமாக தரமான படங்களை எடுக்க முடியும் .சிறந்த இயக்குனர் நடிகர் என்றே கூறுவேன் . பணம் மற்றும் நல்ல மனம் படைத்தவர்கள் சுதா அவர்களை பயன்படுத்தி சிறந்த படைப்புகளை தர வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் .

Verdict : உம்மாண்டி அட அம்மாடி எதிர்பார்த்ததை விட சூப்பர் .உம்மாண்டி இனி மதி சுதா வெல்வாண்டி ……ஈழத்து முழு நீள திரைப்படங்களில் இது வேற லெவல்…..

-ஜெயமதன்-

26Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*