விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்

தமிழ் மக்களின் உரிமைக்காக ஆயுதமேந்தி போராடிய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இறுதிவரை கொள்கையில் உறுதியாக நின்று மரணித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அப்படிப்பட்ட விடுதலைப் புலிகளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்திக் கேவலப்படுத்த முயல்வது படுமுட்டாள்தனம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வருமானமாக இருந்தது எனவும், உலகத்திலுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களுடன் பிரபாகரனுக்கு தொடர்பு இருந்தது எனவும், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம்தான் பிரபாகரன் ஆயுதங்களை வாங்கிப் போர் நடத்தினார் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அண்மையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர் மது, போதையை விரும்பாதவர். அதற்கு அவர் எதிரானவர். போர்க்காலங்களில் இது எமக்கு நன்கு தெரியும்.

அவர்களின் ஆயுதப் போராட்டத்துக்கு இந்தியா, கனடா, சுவிஸ், ஆஸ்திரேலியா, லண்டன், அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ் என உலகெங்கும் வாழ்ந்த தமிழர்கள் நிதி உதவிகளை வழங்கினார்கள்.

அந்த நிதிகள் மூலம்தான் போராட்டத்தைப் பிரபாகரன் முன்னெடுத்தார். அந்த நிதிகள் மூலம்தான் நவீனரக ஆயுதங்களைக்கூட வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்தனர்.

இறுதிப்போர் ஆரம்பமானபோது விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஏற்றி வந்த பல கப்பல்களை எமது படையினர் தாக்கி அழித்த வரலாறும் உள்ளது.

இன்றும்கூட புலம்பெயர் அமைப்புகள் விடுதலைப் புலிகளின் நினைவு தினங்களை பெரும் தொகைப் பணத்தை செலவிட்டுக் பெரு விழாவாக நடத்தி வருகின்றார்கள்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கவில்லை. போர் நிறைவுக்கு வந்த பின்னர்தான் வடக்கில் போதைப்பொருள் பாவனையும், விற்பனையும் தலைவிரித்தாடுகின்றது. இதை ஜனாதிபதி கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆயுதப் போரின்போது எம்மீது விடுதலைப் புலிகள் மிலேச்சத்தனமான – படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள். எனினும், இறுதியில் அவர்களை நாம் கூண்டோடு இல்லாதொழித்தோம்.

மாபெரும் வெற்றிச் செய்தியை இந்த நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்தோம். ஆனால், விடுதலைப் புலிகள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக அவர்களையும் அவர்களின் போராட்டத்தையும் கேவலப்படுத்தி எவரும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*