சுரக்க்ஷா காப்புறுதி மோசடி ; ஜனாதிபதி ஆணைக்குழுவில் அம்பலமானது

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பிரதி பொது முகாமையாளர் தனுஜா ஹிகுரகே, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இடம்பெறும் விசாரணைகளுக்கு சாட்சி வழங்குவதற்காக அவர் ஆஜராகியிருந்தார்.

சுரக்ஷா காப்புறுதியின் முதற்கட்டம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்டதுடன், J.B. Boda என்ற இடைத்தரகர் நிறுவனமொன்றின் ஊடாக அதனை அவர்கள் மறுகாப்பீடு செய்துள்ளனர்.

இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில், குறித்த இடைத்தரகர் நிறுவனம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு தரகுப் பணம் வழங்கியுள்ளதுடன், அந்த தரகுப் பணம் மறுகாப்பீட்டிற்கான தவணை செலுத்தும் போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

முழுமையான மறு காப்புறுதி தவணையில் முதலில் 10 வீதமும் எஞ்சிய 90 வீதம் மூன்று பங்குகளாக செலுத்தப்பட்டதாக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பிரதி பொது முகாமையாளர் இன்று வழங்கிய சாட்சியத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.

குறித்த மூன்று பங்குகள் தொடர்பான பற்றுச்சீட்டுகள், ஜனாதிபதி ஆணைக்குழுவின் கவனத்திற்கு இன்று உட்படுத்தப்பட்டது.

முதலாவது பற்றுச்சீட்டிற்கு அமைய, 637 மில்லியன் ரூபா தவணைக்கட்டணமாகும். அதில் 105 மில்லியன் ரூபா தரகுப்பணம் குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைகளை செலுத்தும் போது தரகுப்பணம் குறைக்கப்பட்டதாக பிரதி பொது முகாமையாளர் கூறியதுடன், அது பற்றுச்சீட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

குறித்த தரகுப்பணத்திற்கு என்ன நேர்ந்தது என்பது பிரச்சினைக்குரியது என ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சாட்சியாளருக்கு சுட்டிக்காட்டினர்.

ஒழுங்கு முறைப்படி கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனை ஏன் குறிப்பிட முடியவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன சாட்சியாளரிடம் வினவினார்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் தமது நிறுவனத்தின் நிதிப் பிரிவினாலேயே வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் நிதிப் பிரிவின் தலைமை அதிகாரி மாலி தென்னக்கோனை, அடுத்த வழக்கு விசாரணைகளுக்கு அழைக்குமாறு ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டது.

இதேவேளை, காப்புறுதியில் உள்ளடக்கப்படும் மாணவர்கள் தொடர்பான தரவுகளை பெற்றுக்கொள்ளும் போது, தகுந்த முறையொன்றை பின்பற்றாமை தொடர்பிலும் ஆணைக்குழுவில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டின் ஊடாக, அரசாங்கத்திற்கு இலாபம் ஏற்பட்டுள்ளதா என அரச சட்டத்தரணி சாட்சியாளரிடம் வினவியதுடன், உரித்து வழங்காமையினால் நட்டம் ஏற்பட்டுள்ளதை தாம் ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*