ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார நிலையங்களை தற்காலிகமாக தடை!

நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமை காரணமாக முஸ்லிம் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதி ஆரையம்பதி பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரிகளின் வியாபார நிலையங்களை தற்காலிகமாக தடை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் 14வது அமர்வு இன்று பிரதேச சபைத் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேசத்தின் பாதுகாப்பு விடயங்களைக் கருத்திற் கொண்டும் இனமுறுகலைக் கட்டுப்படுத்தும் முகமாகவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சபை ஆரம்பத்தின் போது குறித்த தீர்மானங்கள் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் ஐவர் வெளிநடப்புச் செய்தனர். சபையின் கோரம் போதுமானதாக இருந்த காரணத்தினால் சபை தொடர்ந்து இடம்பெற்றது.

இதன் போது மண்முனைப் பற்றுப் பிரதேசத்தில் எல்லைப் புறப் பிரதேசங்களில் மக்கள் வசிக்காமல் வெறுமையாகக் காணப்படும் காணிகளின் வேலிகள் தகரங்களால் பூரணமாக மறைக்கப்படுவது நீக்கப்பட்டு வேலிகள் அமைத்து வீதியில் செல்பவர்களுக்கு காணியின் நிலை தெரியும் வகையில் அமைய வேண்டும் என்ற பிரேரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சா.நகுலேஸ்வரன் அவர்களால் கொண்டுவரப்பட்டது.

அத்துடன் பாதுகாப்புக் கருதி வீதியோர வியாபரிகளின் வியாபாரங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வது தொடர்பிலும் அவரால் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் பொன்.குணசேகரம் அவர்களினால் பாதுகாப்பு கருதியும் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையிலும் ஆரையம்பதி பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வதற்கான பிரேரணையும் கொண்டுவரப்பட்டது.

மேற்படி வெளிநடப்புச் செய்த ஐந்து முஸ்லிம் உறுப்பினர்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து உறுப்பினர்களினால் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக இப்பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*