தமிழர்களை மடையர்கள் ஆக்குகிறார் வடக்கு ஆளுநர்!

ஐ.நாவிடம் சமர்ப்பிப்பதற்கான முறைப்பாடுகளை தருமாறு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கோரியிருப்பது தமிழ் மக்களை மடையர்கள் ஆக்கும் செயல் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் தடுக்கக் கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஐ.நாவிடம் தெரிவிப்பதற்கான முறைப்பாடுகளை மக்கள் தருமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கோரியிருப்பது தமிழ் மக்களை மடையர்கள் ஆக்குகின்ற விடயம். இந்த அரசாங்கத்தால் எத்தனையோ குழுக்கள் நியமிக்கப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மக்களால் சாட்சியங்களும் வழங்கப்பட்டது. இருப்பினும் எந்த பயனும் இல்லை.

20 ஆயிரம் பேர் கட்டாயமாக காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் என்று அரசாங்கத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதைவிட ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் அலுவலகத்துக்கும் ஏறக்குறைய இதே அளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது உறவுகளுக்கு ஏதும் நடந்துவிடும் என்று அச்சத்தில் இதுவரை முறைப்பாடுகளை பதிவு செய்யாமல் உள்ளார்கள். இதைவிடுத்து மன்னார் ஆயர் ராயப்பு ஜோசேப் ஆண்டகை ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேருடைய கணக்கு இறுதி யுத்தத்தில் இல்லை என்று தகவல் வெளியிட்டிருந்தார்.

ஐ.நாவின் இரு குழுக்களும் இத்தகவல் தொடர்பில் ஆராய்ந்து. ஒரு குழு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும், மற்றைய குழு 70 ஆயிரம் பேருடைய கணக்கு இறுதி யுத்தத்தின் போது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் வடக்கு ஆளுநர் ஐ.நாவிடம் கொடுக்கும் முறைப்பாட்டை தருமாறு மக்களிடம் கோருவது எந்த விதத்தில் நியாயமானதாக இருக்கும்?

வடக்கு ஆளுநர் இங்கு நடத்துவது குறைகேள் அரங்கா அல்லது நடமாடும் சேவையா? என்று புரியவில்லை. சர்வதேசத்துக்கு முறையிட்டு முறையிட்டு தமிழ் மக்கள் களைத்துவிட்டார்கள். வடக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு எதிராக செயற்பட வேண்டாம் என்று இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

35Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*