முல்லைத்தீவு ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ; தொல்பொருள் பணிப்பாளர்..

“முல்லைத்தீவு நாயாறில் குருகந்த ரஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்றும்” இலங்கையின் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (12) அவர் இதனைத் தெரிவித்தார்.

நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அதன் சுற்றாடலை ஆக்கிரமித்து பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த விகாரையையும், புத்தர் சிலையையும் அமைத்து வருகிறார். அத்துடன் தைப்பொங்கல் தினமான கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் திகதி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடு செய்த தமிழ் மக்களுடன் பௌத்த பிக்குவும், தென்பகுதியில் இருந்து வந்தவர்களும் முரண்பட்டனர்.

நாயாற்றுப் பகுதியில் கட்டுமானங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையிலும், புத்தர் சிலை அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதனால் பொலிஸார் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியதுடன் முல்லைத்தீவு நீதிவானின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தனர். அதற்கமைய இந்த வழக்கில் நேற்று (12) தொல்பொருள் திணைக்கப் பணிப்பாளரை மன்றில் முன்னிலையாகும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல முன்னிலையாகி, “நாயாறில் உள்ள, குருகந்த ராஜமகாவிகாரை 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன” என்றும் சாட்சியம் அளித்துள்ளார்.

புராதன பௌத்த விகாரை இருந்த இடத்தில் இந்து ஆலயத்தை அமைப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்றும், அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

9Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*