நிலத்தொடர்பற்ற தனி முஸ்லிம் மாகாணம் கிடைக்கவேண்டும்: ஹசன் அலி

முஸ்லிம் பெரும்பான்மை மாகாணமொன்று கிழக்கில் நிலத்தொடர்பற்ற
முறையில் கிடைத்தால் மட்டுமே, அதிகாரப் பரவலாக்கல் என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

நிலத் தொடர்பற்ற வகையில் இந்தியாவிலுள்ள பாண்டிச்சேரி மானில அமைப்பை ஒத்ததாக, முஸ்லிம்களுக்குரிய பெரும்பான்மை அமைய வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அதியுயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இந்த விடயத்தை அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

அஷ்ரப்பின் கோரிக்கை

முஸ்லிம்களுக்கு நிலத்தொடர்பற்ற பெரும்பான்மை மாகாணமொன்று கிடைக்க வேண்டும். இதைத்தான் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணம் வேண்டும் என்ற கோரிக்கையில் மறைந்த தலைவர் அஷ்ரப் தெளிவுபடுத்தியிருந்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய விவகாரம் இப்பொழுது மீண்டும் செய்திகளில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பு தங்களது உரிமைகள் பற்றி மிகவும் லாவகமாக தைரியத்துடன் காய்களை நகர்த்திக் கொண்டு போராடி வருகின்றனர். அதேநேரம் முஸ்லிம் தரப்புக்கள் தங்களுக்குக்கிடைத்த அமைச்சுப் பவிகளைக் கொண்டாடுவதிலும் அபிவிருத்திப்பனிகளை முடுக்கி விடுவதிலும் வாக்குறுதிகளைத் தாறுமாறாக வழங்கி மக்களைத் திசை திருப்பி – இலவசங்களுக்கு ஏங்கும் ஏமாளிகளை மாற்றி வருதனையும் காணக்கிடைக்கிறது.

மர்மம்

அரசியல் யாப்பு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றவாறு நாடாளுமன்றிலுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் நடந்து கொள்கின்றனர். உச்சக்கட்ட அதிகாரப்பகிர்வு மாகாணங்களுக்கு கிடைக்கும் போது, அங்கு வாழும் சமூகங்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுகூலங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளும் பொறிமுறையையும், சமூகம் சார்ந்த விடயங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த விடயங்கள் பற்றி சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் என்ன யோசனைகளை சமர்ப்பித்துள்ளார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

நாட்டிலுள்ள 09 மாகாணங்களிலும் சிறுபான்மையினருக்குரிய சகலவிதமான பங்கீடுகளும் பாதுகாப்பும் – யாப்புரீதியில் உறுதிப்படுத்தப்படாதவரை, எமக்கு பாகுபாடுகள் ஏற்படும்போது நீதிமன்றங்களுக்குச் சென்றும் கூட, எமக்குரிய உத்தரவாதங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது போகும். இதுபற்றி எமது சிறுபான்மை தலைமைகள் என்ன விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பது மர்மமாகவே இருக்கின்றது.

வடக்கு – கிழக்கிலுள்ள நிலைமை மிகவும் பரிதாபகரமாகவுள்ளது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ் சமூகம் எப்போதும் அரசியல் அதிகாரங்களைத் தங்களது ஒற்றுமையின் காரணமாக மிகவும் உறுதியாக தக்கவைத்துக்கொன்டு வருகின்றனர். தமிழர் தலைமைகள் அமைச்சுப்பதவிகளுக்கும் அபிவிருத்தி என்ற மாயைக்கும் மயங்கி பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தம்மை மலினப்படுத்திக்கொள்வதில்லை.

எனினும் அவர்களது பிரதேசங்களில் சிறந்த முறையில் அபிவிருத்தி வேலைகளும் மற்றும் அரச பணிகளும் அப்பழுக்கில்லாமல் நடைபெற்றும் வருகின்றன. அவற்றுக்காக அவர்களின் நிலைகுலையாத தன்மான உணர்ச்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும். பட்டம் பதவிகளைக் காட்டி, யாரும் அவர்களை விலைபேச முடியாதவாறு, தங்களது தலைவர்களையும் வழிநடத்துபவர்களாக வாக்காளர்கள் மாறியுள்ளார்கள்.

இருப்பை எவ்வாறு தக்க வைப்பது?

ஆனால், முஸ்லிம்கள் மிகவும் செறிந்து வாழும் ஒரேயொரு மாகாணமாகிய கிழக்கிலும் கூட, முஸ்லிம்களாகிய நாம் – நமது நிலைமையை மிகவும் பரிதாபகரமாக மாற்றிக்கொண்டுள்ளோம். முஸ்லிம்கள் மாகாண மட்டத்தில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு கிழக்கில் நிலத்தொடர்பற்ற வகையில் முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றினைத்து ஒரு மாகாணத்தைப் பெற்றுக்கொள்ளும் யோசனையினை தலைவர் அஷ்ரப் முன்வைத்தார்.

அந்த யோசனைகள் பற்றி எவரும் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை. தலைவர் அஷ்ரப் முன்வைத்த அந்த நிலத்தொடர்பற்ற மாகாணக் கோரிக்கைக்கு உயிர்கொடுத்தால் மட்டும்தான், வடக்கு – கிழக்கில் தமிழ்பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் பரஸ்பரம் பலமான ஓர் அரசியல் பிராந்தியத்தைப் பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ முடியும். குறிப்பாக முஸ்லிம் சமூகம் தனது இருப்பையும் தனித்துவத்தையும் அரசியல் பலத்தையும் தேசிய அடையாளத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

எனவேதான் அரசியல் யாப்பு விவகாரம் பறிய யோசனைகள் ஆராயப்படும் இக்காலகட்டத்தில், அரசியல் யாப்பில் முஸ்லிம் பெரும்பான்மை மாகாணக் கோரிக்கை உள்ளடக்கப்படுவதற்கு எமது தரப்பு குரல்கொடுக்க வேண்டும். இவ்விடயம் முதன்மைப்படுத்தப்படாமல் வெறுமனே அதிகாரப்பரவலாக்கலைக் கோருவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

தற்பொழுது அரசியல் அதிகாரம் குவிந்துள்ள மத்திய அரசாங்கத்திடமிருந்து, உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டு எதையாவது பெற்றுக்கொள்ளும் நமது சமூகம், எதிர் காலத்தில் அதிகாரம் குவிந்துள்ள 09 மாகாண அரசாங்கங்களிடம் தனித் தனியாக பிரிக்கப்பட்ட மாகாண மட்டக் குழுக்களாக, அரசியல் வலிமையற்றுப் போராடவேண்டிய நிலை ஏற்படும்.

முஸ்லிம் சமூகத்தை அவ்வாறு அரசியல் வலிமை குன்றியவர்களாக மாற்றிய பாவிகளாக, இன்றைய அரசியல் தலைமைகள் எதிர்கால சந்ததிகளால் அடையாளப்படுத்தப்படுவார்கள் என்பது மட்டும் உறுதியாகும்” என்றார்.

10Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*