துயிலுமில்ல காணியை விலை கொடுத்து வாங்கவுள்ள ஸ்ரீலங்கா இராணுவம்; கடும் ஆத்திரத்தில் தமிழ் மக்கள்!

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அளம்பில் துயிலும் இல்ல காணியை ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது தொடர்பில் மாவீரர் குடும்பங்களும் பிரதேச மக்களும் கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.

அளம்பில் துயிலும் இல்லக் காணியின் உரிமையாளர் சிறிலங்கா இராணுவத்திற்கு குறித்த காணியை விற்க முன்வந்துள்ளதை அடுத்து அளம்பில் துயிலும் இல்ல காணியை அளவீடு செய்யும் நடவடிக்கைக்காக இன்று மதியம் சென்ற நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பை அடுத்து அந்த நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டு திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கனவே சிறிலங்கா இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ள சர்ச்சைக்குறிய அளம்பில் துயிலம் இல்லக் காணியை இராணுவத்திற்கு விற்பனைசெய்தே தீருவேன் என்று காணி உரிமையாளரான புவநேஸ்வரி சிவநாதன் சூளுரைத்திருக்கின்றார்.

ஸ்ரீலங்கா படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை கடந்த டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் இதுவரை பலவந்தமாக கையகப்படுத்தி வைத்திருந்த பொதுமக்களது காணிகளை விலைகொடுத்து வாங்க முற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அளம்பில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஐந்து ஏக்கர் காணியை இதுவரை சிறிலங்கா இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்த நிலையில், குறித்த காணியின் உரிமையாளரான தற்போது கொழும்பில் வசிக்கும் புவநேஸ்வரி சிவநாதனிடமிருந்து விலைகொடுத்து வாங்க இராணுவத்தினர் முன்வந்துள்ளனர்.

எனினும் குறித்த காணியிலேயே அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருக்கின்றது.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலும் அளம்பில் துயிலும் இல்லத்தை பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தின் 24 ஆவது சிங்க றெஜிமன் தலைமையகத்தினர் அங்கிருந்த மாவீரர்களின் கல்லறைகளை பாரிய இயந்திரங்களைக் கொண்டு உடைத்து நொறுக்கியதுடன், அந்த காணியை தமது கட்டுப்பாட்டில் வைத்து அதில் விவசாயமும் செய்து வருகின்றனர்.

கடந்த வருடம் நவம்பவர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தன்று அளம்பில் துயிலும் இல்லத்திற்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வுகளும் மக்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. .

இந்த நிலையில், புவநேஸ்வரி சிவநாதனிற்கு சொந்தமான அளம்பில் துயிலுமில்ல காணியை ஸ்ரீலங்கா இராணுவத்தின் பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள முன்வந்ததால் அந்த காணியை விற்க அவர் முன்வந்துள்ளார்.

இதனையடுத்து இன்று வியாழக்கிழமை காணி உரிமையாளரின் முழு சம்மதத்துடன், நில அளவை திணைக்களத்தினர் அளம்பில் துயிலும் இல்ல காணியை அளவிட சென்றனர். சம்பவத்தை அறிந்த கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கிராம மக்கள் இணைந்து காணியை அளக்க விடாது தடுத்திருந்தனர்.

தமது பிள்ளைகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட அளம்பில் துயிலும் இல்ல காணியை இராணுவத்திற்கு மாத்திரமல்ல எவருக்கும் விற்பனை செய்ய விடமாட்டோம் என்று அந்த இடத்தில் கூடிய மக்கள் உறுதியாக கூறினார்.

காணியை அளவிடும் நடவடிக்கையை கைவிடுமாறும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று நில அளவை திணைக்களத்தினரூடாக கரைத்துறைப்பற்று பிரததேச செயலாளருக்கு மக்கள் கையளித்தனர்.

அதுமாத்திரமன்றி சம்பவ இடத்திற்கு சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, இந்த காணியில் ஒவ்வாரு வருடமும் மாவீரர் தின நிகழ்வுகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும் நில அளவை திணைக்களம் பொது மக்கள் முன்னிலையில் காணி உரிமையாளரான கொழும்பில் வசிக்கும் புவநேஸ்வரி சிவநாதனுக்கு தொலைபேசி ஊடாக இந்த பிரச்சினையை தெரியப்படுத்தியது.

இதற்கு காணி உரிமையாளரான புவநேஸ்வரி சிவநாதன் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையை பொருட்படுத்த வேண்டாம் என்று அலட்சியமாக பதில் வழங்கினார்.

24 ஆவது சிங்க றெஜிமன் படையணியின் தலைமையகத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள அளம்பில் துயிலுமில்ல காணியை விற்பனை செய்ய முன்வந்துள்ளமையை உறுதிப்படுத்திய அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், இந்த காணியை அரசாங்கம் பொது காணியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அளம்பில் துயிலும் இல்லத்தில் தமது பிள்ளைகளை நினைவுகூர தடைவிதிப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என்று முன்னாள் போராளி ஒருவர் கூட்டிக்காட்டினார்.

92Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*