சமஸ்டியை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்க போவதில்லை; மஹிந்தவாதி சூளுரை!

தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை கொள்ளையடிப்தற்காகவே நிறைவேற்ற முடியாது என்று தெரிந்துகொண்டும் புதிய அரசியல் சாசன வரைபினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மஹிந்தவாதியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் இந்தத் சதி முயற்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் துணைபோவதாகவும் குற்றம்சாட்டியுள்ள எஸ்.பீ.திஸாநாயக்க, சமஸ்டியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாசனத்தை நிறைவேற்ற ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென்றும் சூளுரைத்துள்ளார்.

கண்டியில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த நிலையில எஸ்.பி இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

“உண்மையில் இந்த புதிய அரசியலமைப்பு எனது அனுபத்தின் அடிப்படையில் பார்க்கையில் இது இந்த அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் செயற்படுத்த முடியாத ஒரு விடயமாகும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழுமையாக வடக்கிலுள்ள தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளும் மிகப்பெரியதொரு பொய்யாகும். இறுதியில் இந்த நடவடிக்கையின் மூலம் எழக்கூடிய பழியையும் முழுமையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தி, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அனைத்து வாக்குகளையும் பெற்றுக் கொள்ளும் முயற்சியிலேயே ஈடுபடுவதாகவே எனக்கு விளங்குகின்றது.

அதனால் எவ்வாறான நிலையிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியெனும் ரீதியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியெனும் ரீதியிலும் மற்றும் கூட்டு எதிரணியெனும் ரீதியிலும் நாம் சமஸ்டி ஆட்சி முறைமைக்கு ஒருபோதும் இணக்கம் தெரிவிக்க மாட்டோம். அதேபோல வடக்கு கிழக்கினை ஒன்றிணைக்கும் சீர்திருத்தத்திற்கும் நாம் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை. அதனால் நாம் இந் நாட்டின் முதன்மை மதமாகவும், பௌத்த மதத்தினை அரச மதமாக இருக்கும் நிபந்தனையினையும் மாற்றம் செய்வதற்கு நாம் இணக்கம் தெரிவிக்க மாட்டோம்”.

தற்போதைய நாடாளுமன்றில் உத்தேச அரசியல் சாசனவரைபை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இல்லை என்பதால், எதிர்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி திஸாநாயக்க கூறுகின்றார்.

இதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களம் பெருந்தொகையான பணத்தை வாரி இறைத்துவருவதாகவும் மஹிந்தவாதியான எஸ்.பி புதிய தகவலொன்றை முன்வைத்துள்ளார்.

“சுமந்திரன் மற்றும் அவரின் பின்னால் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் புலம்பெயர் அமைப்புகள் ஊடாக பணம் வழங்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கவும் முயற்சிக்கின்றனர். இவ்வாறு செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது. நான் இவற்றை ஒருபோதும் ஏற்க மாட்டேன். இந்த நாடாளுமன்றில் இவ்வாறு நாட்டுக்கு விரோதமான, மக்களுக்கு விரோதமான, தேசவிரோத அரசமைப்புக்களை நிறைவேற்ற ஒருபோதும் வாய்ப்பில்லை. அதனால் இது முற்றிலும் பொய்யானதொரு விடயமாகும்.

சிறிலங்கா பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவும் அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் முன்னெடுத்துவரும் நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும் உத்தேச அரசியல் சாசன வரைபு தொடர்பான உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்திவரும் அரச, தனியார் ஊடகங்களையும் சூட்சமமாக வேட்டையாட தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க கூறுகின்றார்.

“ஊடக வேட்டையொன்றினை மேற்கொள்ள வேண்டிய தேவை ரணில் விக்ரமசிங்கவிற்கு உள்ளது. அதனால் தற்போது அந்த வேட்டையினை ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார். லெக் ஹவுஸ் நிறுவனத்தில் அதேபோல சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

அதேபோ சிறிலங்காவில் இயங்கிவருகின்ற தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் ஒலிபரப்பாகிய அரச விளம்பரங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அது பழக்கத்திற்குரியதொரு விடயமாக ஜே.ஆர்.ஜயவர்தன ஆரம்பித்த பிரேமதாச முன்னே எடுத்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சாதாரணமானதொரு சம்பிரதாயமாகும். தற்போது இந்த ஊடக அடக்குமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அதற்கு எதிராக இந்த நாட்டு மக்களுடன் நாம் வீதிக்கு இறங்கவும் தயாராகவேயே உள்ளோம்.

7Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*