அன்பார்ந்த முஸ்லிம் நெஞ்சங்களே! தயவு செய்து பகிருங்கள்!!

Ashraf Ahameth (கல்முளை)

கடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற அந்த கசப்பான சம்பவத்தினை நீங்கள் யாவரும் அறிந்திருக்கக்கூடும்.
ஒரு மூத்த வயதுடையவரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டும் அந்த கோர சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு சமூகங்களும் தமிழ் பேசும் சமூகமே.

இந்த விடயத்தில் தமிழர் முஸ்லிமுக்கோ, அல்லது முஸ்லீம் தமிழருக்கோ இந்தக் கொடூரமான செயலை செய்வது எப்படியும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அவர் உண்மையிலேயே ஏதேனும் தவறு செய்திருப்பினும், தண்டனை வழங்கும் அதிகாரத்தை நாம் கையிலெடுக்க முடியாது என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? வயதில் மூத்த ஒருவரை கீழாடையின்றி நிர்வாணப்படுத்தி தண்டிக்கும் காட்சி மனிதாபிமானம் உள்ள யாருக்கும் இதயத்தை உருக்ககூடியது என்பதை உணர்கிறீர்களா? ஏன் இப்படி நடக்கிறது? முஸ்லிம்களாகிய நாங்கள் செய்யும் கீழ்தரமான செயல்களாகும்.திருட்டு காணி பிடித்தல், வலிந்து மதமாற்றம் செய்தல், அடுத்தவன் பகுதிக்குள் அத்துமீறல், இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கிருந்து யாழ்பாணம் வழியாக போதைப்பொருள் கடத்துதல் இதற்கு தமிழ் இளைஞர்களை பயன்படுத்தல்…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். காரணம் தமிழர்களுக்கு முஸ்லிம்களாகிய எங்களின் கபடத்தனம் சூழ்ச்சிகள் புரிந்து விட்டது.

கடந்த முப்பது வருட கொடிய யுத்தம் வடகிழக்கை சின்னாபின்னப்படுத்தி எம் வாழ்வையும் வளர்ச்சியையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமன்றி, எம் குழந்தைகள்வரை அதன் தாக்கம் வீழ்ச்சியை ஏற்படுத்தியதை நாம் மறந்துவிட்டோமா? நாம் அடைந்தவற்றைவிட இழந்தவைதான் அதிகம் என்பதை நாம் உணர்ந்தோம் அல்லவா?

உண்மையிலேயே ஓரிரு அற்பர்கள் செய்யும் செயலால் ஈரினங்களும் அல்லல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இரண்டறக் கலந்து வாழும் தமிழ் முஸ்லிம்களிடையே பகைமையை ஏற்படுத்தி குளிர்காய முனையும் கயவர்கள் யார்? ஏன் கிழக்கிலும் வடக்கிலும் எப்போதுமே இனமுறுகலை எதிர்பார்த்துச் செயற்படுகிறார்கள்? நிம்மதியான சுவாசக்காற்றை சுவாசித்து மனிதாபிமானத்துடன் வாழும் மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி இரு இனத்தின் வாழ்விலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் கபட செயலுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா?

நமது கருத்துக்களும், வார்த்தைப்பிரயோகங்களும், செயற்பாடுகளும் இன்னோர் இனத்தை வேண்டுமென்றே சீண்டுவதாக இருந்தால் எப்படி எங்கள் சமுதாயம் நிம்மதியான வாழ்வை வாழ முடியும். வடகிழக்கின் தமிழர்களும் அண்டைவீட்டு முஸ்லீம்களும் வாழும் இந்த ஒற்றுமையான வாழ்வை சீரழித்துவிட்டு எதை நாம் அடையப்போகிறோம்? அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இவ்வாறான இனசீண்டல்கள் இலாபமளிக்குமே அன்றி ஏழை மக்களுக்கு?

ஒன்றை மட்டும் எண்ணிப்பாருங்கள். நடைபெற்ற அசம்பாவிதங்கள் முஸ்லீம் தரப்பினால் தமிழருக்கு நடந்திருந்தால் இப்போதைய உங்கள் மனநிலை என்னவாக இருக்கும். ஆனாலும் பொறுமையுடன் நிதானத்துடனும் சட்டரீதியாக அதனைக் கையாள்வதுதான் சிறப்பு என்ற தீர்மானத்தில் இருக்கும் கிழக்கு முஸ்லீம்களை இன்னுமின்னும் காடையர் குழுகொண்டு தாக்குவது எவ்வகையான கீழ்த்தரமான செயல்? இது ஓர் பாரிய இனவிரிசலையே நமக்குள் உண்டுபன்னக்கூடும் அல்லவா?

தன் தாயை உண்மையாய் நேசிப்பவன் ஒருநாளும் மற்றவர் தாயின் வயிற்றுக்கு அநீதி செய்யமாட்டான். அதுபோலத்தான் தன் இனத்தை உண்மையாய் நேசிப்பவன் மற்ற இனங்களுக்கு அநீதி நினைக்கமாட்டான். நாங்கள் எங்கள் தாயைப்போல இனத்தையும் சமூகத்தையும் ஏன் உங்களையும் கூட நேசிக்கின்றோம், மதிக்கின்றோம், மரியாதை செய்கின்றோம். தயவுசெய்து காடையர்களின் கபடத்தனத்தில் சிக்குண்டு நமக்குள் ஓர் இன விரிசலை ஏற்படுத்த எப்போதும் துணைபோகாதீர்கள்.
Ashraf Ahameth (கல்முளை)

107Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*