வடகிழக்கு இணைக்கப்பட போவதாக கூறுவது வெறும் வதந்தியாம்!

வடக்கு, கிழக்கை இணைத்து தனியான நிர்வாக அலகினை வழங்க ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முயற்சிப்பதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த வதந்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கண்டி, திகனை பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம், இனவாதத்தை தூண்டி அரசியல் லாபம் தேடும் அரசியல்வாதிகளே இந்த பிரசாரங்களை முன்னெடுத்துவருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவில் கடந்த 52 நாட்களாக ஏற்படுத்தப்பட்ட அரசியல் நெருக்கடி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், தோல்வியடைந்த தரப்பினர் தற்போது மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை பரப்புகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டினார்.

நாட்டில் அரசியலமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்காக அரசியல் யாப்புச் சபையாக நாடாளுமன்றம் மாற்றப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிரதமர் தலைமையிலான வழிநடத்தல் குழுவில் சிறிலங்கா முஜ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கட்சியினர் என பலரும் அங்கம் வகிக்கின்றனர் என்றும் கூறினார்.

இந்த வழிநடத்தல் குழுவினூடாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், அந்த மாற்றங்களில் இந்த நாட்டில் புத்தசாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உயர்ந்த அந்தஸ்தை சிறிதேனும் குறைப்பதற்கான எவ்விதமான யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை என்றும் அடித்துக் கூறினார்.

பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதே அந்தஸ்தை குறைவில்லாமல் வழங்குவதோடு ஏனைய மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்தினையும் அதே அளவில் வழங்குவதே சிறந்தது என்று அனைவரும் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதத்திலும் பாதகம் ஏற்பாடாத வகையில் சில சொற்களில் திருத்தங்கள் மேற்கொள்ள தாங்கள் ஆலோசனை முன்வைத்துள்ளதாகவும், சிலர் தமிழ் மொழியில் உள்ள ஒற்றுமை என்ற சொல்லுக்கான பிழையான அர்த்தத்தை கற்பித்துக்கொண்டு மக்களை தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இவர்களின் அரசியல் நோக்கம் கொண்ட இந்த செயற்பாடு தொடர்பில் கவலை வெளியிட்ட அமைச்சர், யாப்பில் கூடுதலாக எந்த திருத்தம் கொண்டு வந்தாலும் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறினார்.

அப்போதுதான் அது சட்டமாக அங்கீகரிக்கப்படும் என்றும் கூறிய அமைச்சர், பௌத்த மதத்தின் அந்தஸ்தை கேள்விக்குற்படுத்தும் எவ்விதமான திருத்தங்களும் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் அதிகமாக பௌத்த தர்மத்தை பின்பற்றுகின்றவர்களே இருக்கும் நிலையில், இவ்வாறான ஒரு சட்டத்தை நிறைவேற்ற ஒருபோதும் உடன்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்கப்போவதாகவு், ஒற்றையாட்சியை இல்லாதொழிப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் வெறும் அரசியல் உள்நோக்கங்களுக்காக மக்களை அச்சத்திற்குள்ளாக்கும் செயல்களாகவே பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை அதிகார பகிர்வின் மூலம் அல்லது வேறு ஏதாவது வழிகளின் மூலம் சுயாட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், இதற்காகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அசராங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிக்க உதவியது என்று பல்வேறுபட்ட பொய்ப்பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆனால் இவை அனைத்தும் முற்றுமுழுதாக பொய்யனவை என்று தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே எதிரணியினர் பல்வேறுபட்ட பொய்களை கூறுவதாகவும் குற்றம்சாட்டிய அமைச்சர், தாங்கள் வெளிநாட்டு பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை ஏமாற்றுவதாக கூறுவதும் அப்பட்டமான பொய்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகத்தின் குரலாக இருக்கும் தம்மை தனிமைப்படுத்தி அழுத்தங்களின்மூலம் அடிபணிய வைப்பதே பொய்ப் பிரசாரங்களை முன்னெடுக்கும் தரப்பின் நோக்கமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார தடைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாடுகளுடன் பேசி புத்திசாலித்தனமான கொடுக்கல், வாங்கல் மூலம் தீர்த்துவைத்ததை நாட்டு மக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள அமைச்சர் ஹக்கீம், சர்வதேச நாடுகள் எதிர்பார்த்த, ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்றங்களை ரணில் அரசு செய்தமையே இதற்கான காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதனை கேள்விக்குற்படுத்தும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்த அமைச்சர் ரவூப், தற்போது ஏற்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு தொடர்ந்தும் எதிர்காலத்திலும் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனால் தவறான வதந்திகள், பொய்யான பிரச்சாரங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

10Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*