விடுதலைப் புலிகளின் அறிக்கை! ஈழத் தமிழினத்தின் விடுதலைக்கு எதிரான பெரும் தடையை நீக்கும்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையானது தங்களின் இயக்கத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் நோக்குடன் நிறைவேற்றப்பட்ட சதியாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, ஈழத் தமிழினத்தின் விடுதலைக்கு எதிராக நிலைநிறுத்தப்பட்டுள்ள பெரும் தடையை நீக்கும் அரசியல் முன்னெடுப்பாகும் என்று தமிழ் நாட்டின் மூத்த ஊடகவியலாளர் கா.ஐயநாதன் தெரிவித்துள்ளார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

ராஜீவ் காந்தி படுகொலையைக் காரணமாக்கி சர்வதேச அளவில் ஆதரவைப் பெற்று ஈழத்த்தமிழினத்திற்கு எதிராக போரைத் தொடுத்து தமிழினத்தை அழித்தொழித்த சிங்கள பெளத்த இனவாத அரசும் தென்னிலங்கைக் கட்சிகளும் இன்று தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற நடாத்திக் கொண்டிருக்கும் நாடகம் இலங்கை அரசியலை திக்கு தெரியாத திசையில் நகர்த்திச் செல்லும் சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையானது இந்திய – சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் ‌வாய்ந்ததாகும்.

எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வு என்பது அச்சிக்கலை ஆழ்ந்து சென்று புரிந்து கொள்வதில்தான் உள்ளது என்பது உள்ளூர் அரசியல் முதல் சர்வதேச அளவிலான சிக்கல்களுக்குத் தீர்வை நோக்கிய செயலாற்றுதலுக்கு அடிப்படையாகும்.

ஈழத்தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை அதைப் பற்றிய புரிதல் இந்திரா காந்தி அம்மையார் இந்நாட்டின் பிரதமராக இருந்தவரை தெளிவாகவே இருந்தது.

அதனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனக் கலவரத்தில் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டதை திட்டமிட்ட தமிழின அழித்தல் என்று 1983 ஓகஸ்ட் 15ஆம் நாள்‌ செங்கோட்டையில் கொடியேற்றி விட்டு ஆற்றிய உரையில் அழுத்தமாக தெரிவித்தார்.

இந்திரா அம்மையார் பிரதமராக இருந்தவரை இந்திய ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் யாவும் ஈழத் தமிழினத்திற்குச் சாதகமானதாகவே இருந்தது.

இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் இந்தியப் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்றப் பின்னர் ஈழத் தமிழர்களின் அரசியல் சமூக உரிமை மற்றும் நலம் சார்ந்த ஆதரவு நிலை பின்தள்ளப்பட்டு இலங்கை அரசின் ‘நட்பிற்கு’ முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அதன் விளைவே ஈழத் தமிழினத்தின் பங்களிப்பு இல்லாமலேயே உருவாக்கப்பட்டுத் திணிக்கப்பட்ட இந்திய- இலங்கை (1987) ஒப்பந்தமாகும்.

இதுவே புலிகள் இயக்கத்திற்கும் இந்திய ஒன்றிய அரசுக்கும் இடையே உருவாக்கப்பட்ட முதல் இடைவெளியாகும். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்வும் அந்த இடைவெளியை பகைமையாக்கியது. புலிகள் இயக்கத்திற்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையிலான நேரடி யுத்தமானது.

இருதரப்பிலும் பல்லாயிரக்கணக்கில் உயிர்பலி ஏற்பட்டது என்பதையன்றி புலிகளுக்கோ இந்திய ஒன்றிய அரசிற்கோ எந்த இலாபமும் கிட்டவில்லை.

ஆனால் சிங்கள பெளத்த இனவாத அரசியல் பலம் பெற்றது. தமிழருக்கு ஆதரவான இந்திய ஒன்றிய அரசின் நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரானதாக மாறியது.

இதிலிருந்துதான் இந்திய நாட்டின் எதிரியாக விடுதலைப் புலிகளை சித்தரிக்கும் ராஜதந்திரம் கட்டமைக்கப்பட்டது. அதுவே பின்னாளில் ராஜீவ் காந்தியை கொன்றது புலிகள் இயக்கமே என்று நம்பவைக்கும் முயற்சியை எளிதாக்கியது.

ராஜீவ் காந்தியை கொள்வதனால் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ மக்களும் பெறக்கூடிய அரசியல் இலாபம் என்ன? என்கிற கேள்வி பதிலின்றி அமிழ்ந்து போனது.

இதனை நன்குணர்ந்த சிங்கள பெளத்த இனவாதியான மகிந்த ராஜபக்சவும் இந்திய அரசுக் கட்டமைப்பில் ஊடுறுவி வலுப்பெற்று நின்ற அரசியல் ராஜதந்திரிகளும் கூட்டணி அமைத்துச் செயல்பட்டு முதலில் அமைதிப் பேச்சுவார்த்தையை சிதைத்தனர், பிறகு உள்நாட்டுப் போருக்கு வித்திட்டனர்.

அந்த போரை ‘வெற்றிகரமாக’ நடாத்தி முடிக்க அனைத்து ஆலோசனைகளையும் தந்தனர். இவை யாவற்றையும் ஆதாரத்துடன் ‘ஈழம் அமையும்’ எனும் புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.

சிங்கள பெளத்த இனவாத அரசின், அரசியலின் பிடியிலிருந்து ஈழத் தமிழினத்தை விடுவிக்க சர்வபரித் தியாகங்களையும் செய்த விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று முத்திரை குத்தி, அதற்கு சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்று உள்நாட்டுப் போரை தொடங்கி நடாத்தி ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவிக்கத் துணை நின்று இந்திய அரசு கண்ட பலன் என்ன?

இன்று இலங்கை யார் பக்கம் நிற்கிறது? இந்தியாவிற்கா அது நட்பு நாடு? சீனாவின் பிடிக்குள் முழுமையாக சென்றுவிட்டதே? மறுக்க முடியுமா? இது இந்திய அரசின் ராஜதந்திர தோல்வியல்லவா?

இன்றைக்கு இலங்கை நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரம் சீரழிந்து கிடக்கிறதே, அதுவல்லவா இன்றைய அரசியல் குழப்படியை முன்னுக்கு கொண்டுவந்துள்ளது? இந்நிலையை மாற்றும் பொருளாதார பலம் இந்நாட்டின் அரசுக்கு இருக்கிறதா? நீங்கள் நிலைநிறுத்திய இனவாத அரசு அனைத்து வகையிலும் தோல்வி கண்டுவிட்டதே!? இப்போது கூறுங்கள் இந்திய அரசின் ராஜதந்திரிகளே இலங்கை சார்ந்த உங்களின் அயலுறவுக்

கொள்கை தோற்றது ஏன்? இந்திய நாட்டின் நலன் நாடி நட்புப் பாராட்டிய ஈழத் தமிழினத்தை அழித்தீரே!

இந்நாட்டின் ஆதரவை நாடி நின்ற புலிகளை அழிக்க துணை நின்றீரே! இப்போது சொல்லுங்கள் யார் உங்கள் நண்பன்? யார் உங்கள் பகைவன்? இதற்கு மேலும் சிங்களத் தலைமைகளை வசப்படுத்தும் பலப்படுத்தும் எண்ணம் கொள்ளாதீர்கள்.

இந்தியாவின் நலனும் தென்னகப் பாதுகாப்பும் சுதந்திரத் தமிழீழத்தைச் சார்ந்து மட்டுமே நிலைப்பெற இயலும், வேறு எவ்வகையிலும் சாத்தியமாகாது.

தமிழீழத்தின் தலை எழுத்தும் இந்நாட்டின் தலையெழுத்தும் பூகோள அரசியலால் பின்னிப் பிணைக்கப்பட்டுளதை மறுக்க முடியாது. இதனை உணர்ந்து மெய்யான அயலுறவுப் பாதையை இந்நாடு வகுக்கட்டும்.

இந்தப் பார்வையுடன் தமிழில் விடுதலைப் புலிகளின் அறிக்கையை அணுகுங்கள் என்றும் தமிழ் நாட்டின் மூத்த ஊடகவியலாளர் கா.ஐயநாதன் குறிப்பிட்டுள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*