விடுதலை புலிகளின் இலக்குகளை நிறைவேற்றிக்கொள்ள ரகசிய ஒப்பந்தம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான நிபந்தனைகள் பலவற்றை முன்வைத்து, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியுடன் ரகசிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக மஹிந்தவாதியான பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

அன்பான வாசகர்களே ! புதிய செய்திகளை அறிய SLT NEWS ஐ கூகுளில் தேடுங்கள்

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள உதய கம்மன்பில, நாட்டிற்கு பேராபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த இரகசிய உடன்பாடு தொடர்பிலான முழுமையான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

எனினும் எந்தவித எழுத்துமூல உடன்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்ளாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டிவரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ, கூட்டமைப்பு இந்த தவறை நிவர்த்தி செய்யாதுவிட்டால் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பம் தீர்வின்றி தொடரும் நிலையில், ஆட்சியமைப்பது யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இதில் ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னதான ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை மீள அமைப்பதற்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டு உறுதிப்படுத்தியிருந்தனர். .

இந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளில் தலைமையேற்றுள்ள ஒருவரான பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆமைப்பின் அரசியல் பிரிவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இருந்ததாகவும் குற்றம்சாட்டிய உதய கம்மன்பில, அதற்கு ஆதாரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிக் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில நிழல் படங்களையும் ஊடகங்களுக்கு காண்பித்தார்.

உதய கம்பன்பில – “கடந்த ஒருமாத காலமாக, மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகவும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு ஆதரவளிக்கப்போவது இல்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஒருமாதகாலமாக கருத்து வெளியிட்டு வந்தது. எனினும் தற்போது பிரதமர் பதவியில் ரணிலை அமர்த்துவதற்கு ஆதரவு வழங்குவதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வருவதற்கு என்ன காரணம்? ஐக்கிய தேசியக் கூட்டமைப்பிற்கும் – ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் ரகசிய இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதனை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட, ‘யானை – புலி” ஒப்பந்தத்தின் மூலம், தனித் தமிழீழத்திற்கான எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன. புலனாய்வாளர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் – ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்த்திற்கு அமைய, இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டன, புலி சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். புலனாய்வாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு ‘யானை – புலி” ஒப்பந்தத்தால் மூன்றாவது முறையாகவும் பாதிப்பினை எதிர்நோக்க நாட்டு மக்கள் தயாரில்லை. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் இந்த நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் செயற்பாட்டில் இருந்த காலத்தில், அந்த அமைப்பின் அரசியல் பிரிவாக செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று அந்த அமைப்பின் செயற்பாடுகள் இல்லாத நிலையில், அந்த அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றது”.

எவ்வாறெனினும், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு எந்தவொரு நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ, ஒப்பந்தமொன்று ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் ரோலோவின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என ரெலோவின் முதல்வர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 30 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மத்தியாபரணம் ஏப்ரகாம் சுமந்திரன், ஸ்ரீலங்கா அரசியலில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்பத்தை முடிவிற்கு கொண்டு வருவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிக சிரத்தையுடன் செயற்படுவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தியிருந்தார்.

இதேவேளை வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது உள்ளிட்ட பல விடயங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – ஐக்கிய தேசிய முன்னணியும் கடந்த காலங்களிலும், தற்போதும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக மஹிந்தவாதியான உதய கம்மன்பில குற்றம்சாட்டி வருகின்றார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச, வடக்கு – கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என்று கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் உறுதிப்படுத்தியிருந்தார்.

ரோஹன லக்ஸ்மன் பியதாச –“ வடக்கு கிழக்கில் உள்ள பாடசாலைகள் – கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள அனைத்து இராணுவ முகாம்களையும் அகற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். சிவில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சு, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு உட்பட்டதாகவே முன்னர் அமைந்திருந்தது. இருப்பினும் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை”.

இதேவேளை மஹிந்தவாதியான உதய கம்மன்பில உட்பட மஹிந்தவாதிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலுடன் இணைந்து நாட்டை பிளவுபடுத்த முயல்வதாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற போதிலும், அவற்றுக்கு முற்றிலும் முரணான தகவல்களை சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறி வருகின்றார்.

குறிப்பாக டிசெம்பர் நான்காம் திகதி கொழும்பிலுள்ள சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டிலும், அதேபோல் டிசெம்பர் ஐந்தாம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் அரச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலும் உரையாற்றியிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, வடக்கு கிழக்கு மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்த்துவைக்க ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்ற பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

அது மாத்திரமன்றி 13-ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மீளப் பெற்றுக்கொள்வதற்காக பல யோசனைகளை அமைச்சரவைக்கு ரணில் சமர்ப்பித்திருந்ததாகவும், அவற்றை தானே நிறைவேற்ற விடாது தடுத்திருந்ததாகவும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

13Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*