இலங்கை அரசியல் களத்தில் மீண்டும் விடுதலைப்புலிகள்??

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து குழுக்களுடனும், சில மேற்குலக நாடுகளுடனும் இணைந்து சிறிலங்காவின் ஆட்சியை கைப்பற்ற முனைவதாக மைத்திரி – மஹிந்த அணியினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

Loading...

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதோடு இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மைத்திரி – மஹிந்த தலைமையிலான காபந்து அரசாங்கத்தின் அமைச்சர் உதய கம்மன்பில இந்த குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்றார்.

சிறிலங்காவில் தேர்தல்கள் வரும் போது தென்னிலங்கையைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் வாக்குகளை சேகரிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்துவது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

மேலும் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு ஜனவரி ஐந்தாம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதாக சிறிலங்கா அரச தலைவர் விடுத்த அதிரடி அறிவிப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் குற்றம் சாட்டிவருகின்ற போதிலும், அனைத்துத் தரப்பினரும் பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் சிறிலங்கா அரச தலைவரின் திடீர் பொதுத் தேர்தல் அறிவிப்பை நியாயப்படுத்துவதற்காக இன்றைய தினம் மைத்ரி – மஹிந்த தலைமையிலான காபந்து அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, அவர்களது தேர்தல் பிரசாரத்தை தொடக்கி வைத்துள்ளனர்.

இதில் கலந்துகொண்ட பௌத்த மத மற்றும் சமய அலுவல்கள் அமைச்சராக நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட உதய கம்மன்பில, ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்கள் கூட்டு சேர்ந்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்ககையில், “ எமக்குத் தெரியும் மத்திய வங்கியை இரண்டு தடவைகள் உடைத்து கொள்ளையடித்த பெருந்தொகைப் பணம் ஐக்கிய தேசியக் கட்சியிடமே உள்ளது. அதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்து குழுக்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே கூட்டு சேர்ந்துள்ளனர். இவை மாத்திரமன்றி மேற்குலக நாடுகளில் சில வல்லரசு நாடுகள் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பெருந்தொகைப் பணத்தை செலிவிட்டதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

அதற்கமைய மேற்குலக நாடுகளின் பெருந்தொகைப் பணமும் ஐக்கிய தேசியக் கட்சியிடத்தில் இருக்கின்றது. அப்படியானால் பண மூட்டைகளை கைவசம் வைத்திருக்கும் தரப்பினரின் பணத்தைக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்ற இடமளிப்பதா?,இல்லையென்றால் நாட்டு மக்களிடத்தில் அவர்கள் விரும்பும் பிரதமரை தெரிவுசெய்ய அவர்களுக்கு அனுமதிப்பதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதன்போதே ஜனாதிபதி நாட்டின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் உரிமையை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கின்றார். நாட்டு மக்களிடத்தில் அந்தத் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி வழங்கியதும் அதனால் ஐக்கிய தேசியக் கட்சி பெரிதும் குழப்பம் அடைந்திருக்கின்றது. குறிப்பாக ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லப்போவதாக தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருக்கின்றது. ஜனாதிபதி எடுத்தத தீர்மானம் தவறு என்றால், எமது செயற்பாடுகளில் பிழை இருந்தால் நாட்டு மக்கள் எங்களுக்கு தண்டனை வழங்குவார்கள். ஐக்கிய தேசியக் கட்சி கடந்த நான்கு வருடங்களாக இந்த நாட்டை ஆண்ட விதம் தவறு என்றால் மக்கள் அவர்களை தண்டிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முழுமையாக அழித்துவிட்டதாக சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்து பத்து வருடங்கள் கடப்பதற்கு சில மாதங்கள் உள்ள நிலையில், நடைபெறவுள்ள தேர்தலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுக்க இம்முறையும் மஹிந்த – மைத்ரி அணி திட்டமிட்டுள்ளதையே அமைச்சர் உதய கம்மன்பிலவின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது.

குறிப்பாக நாட்டில் 30 வருடங்களாக யுத்தம் நீடித்த காலப்பகுதியிலும் தேர்தல்கள் காலங்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெயரை பயன்படுத்தியே தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

116Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*