இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு மு.க ஸ்டாலின் கண்டனம்

இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறியுள்ளன.

Loading...

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, தேர்தல் நடைபெற்ற நான்கரை ஆண்டுகளுக்குள் இலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் என்று இலங்கை அரசியல் சட்டம் மிகத் தெளிவாக வரையறுத்துள்ள நிலையில், அந்த அரசியல் சட்டத்தினைக் காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சியின்றி, பாராளுமன்றத்தைக் கலைத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அராஜகம் பேரதிர்ச்சியளிக்கிறது.

மிக மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி – அதன் மூலம் இலங்கையில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

தமிழர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இந்த அக்கிரமத்தை ஏதோ அண்டை நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் என்று ஒதுக்கி வைத்து விட முடியாது என்றாலும், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு துவக்கத்திலிருந்தே இந்த ஜனநாயக விரோத செயல்களை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அதை விடக் கவலையளிக்கிறது.

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை பணிகளும் தடைபட்டு விட்டது.

ஆகவே, விபரீத சூழல் இலங்கையில் உருவாகி, அரசியல் நெருக்கடியும், ஸ்திரத்தன்மையும் ஆபத்திற்குள்ளாகி இருக்கும் இந்த நேரத்தில், அங்கு வாழும் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இந்திய அரசுக்கு இருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திரமோடி தாமதமாகவேனும் உணர வேண்டும் என்றும், இலங்கையில் பட்டப்பகலில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஜனநாயகப் பச்சைப் படுகொலைக்கு, இந்திய அரசு உடனடியாகக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

16Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*