மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது: டில்வின் சில்வா

மஹிந்தவின் ஆட்சி மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டியத் தேவை தமக்கு இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு கடந்த 13 ஆம் திகதியுடன் 3 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. இந்த மூன்று வருட காலமானது எந்தவொரு சமூகப்பிரிவின் எதிர்ப்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்யாத காலமாகவே இருந்து வருகிறது.

ஜனாதிபதிக்கு வடக்கு மக்கள் உள்ளிட்ட 62 இலட்சம் பேர் வாக்களித்தனர். இவர்கள் அனைவரது எதிர்ப்பார்ப்பையும் இந்த அரசாங்கம் தற்போது இல்லாதொழித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாத தோல்வியடைந்த, ஒரு அராஜகமான ஆட்சியே நாட்டில் நிலவிவருகிறது. மக்களுக்கும் இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது.

இதனால், அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இதன் விளைவாகவே மீண்டும் மஹிந்த ஆட்சிக்கு வரமுயற்சித்து வருகிறார்.

எனினும், மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர யாரும் விரும்பவில்லை. அவரது குடும்பத்தில் எவர் வந்தாலும் அதனை தடுக்கவே நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

20 ஆவது திருத்தச்சட்டம் ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக் கொள்ளப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது. அதனையும் மீறி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் கூட மஹிந்த அணியினருக்கு வேட்பாளரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கோட்டாவின் பெயர் இதற்காக முன்வைக்கப்பட்டது. ஆனால், எதிர்ப்புக்கள் காரணமாக அது பின்வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசியல் யாப்புக்கு இணங்க மூன்றாவது முறையாகவும் மீண்டும் தன்னால் ஜனாதிபதியாக முடியும் என மஹிந்த கூறிவருகிறார்.

எவ்வாறாயினும், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு இணங்க அது முடியாது என்பது எமக்கு தெரியும். எனினும், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள விரிசலை சமாளிக்கவே அவர் இவ்வாறு கூறுகிறார். மஹிந்தவின் ஆட்சி மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டியத் தேவை எம் அனைவருக்கும் இருக்கின்றது” என கூறினார்.

15Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*