எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குச் சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே! அதைப் பறிப்பது பெரும் ஜனநாயக மீறல்!!

Loading...

நாடாளுமன்ற சம்பிரதாய மற்றும் ஜனநாயக அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடமே இருக்க வேண்டும். அதைப் பறிக்க நினைப்பது பெரும் ஜனநாயக மீறலாகும், என சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு சம்பந்தனுக்கு இருக்கின்ற அரசியல் உரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு இன்றைய தினம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்து வருகின்றது இந்த மகிந்த அணி, அவர்களின் சதிகளில் ஒன்றுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பறிக்க முயற்சிப்பது.

இந்த முயற்சி ஜனநாயக மீறலாகும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுள் ஆட்சியில் பங்கெடுக்காத அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள கட்சிக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படவேண்டும்.

அந்தவகையில் ஆறு கட்சிகள் மாத்திரமே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அவற்றுள் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய மூன்றும் அரசுக்குள் இருக்கின்றன. ஏனைய மூன்று கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் எதிர்க்கட்சிகளாக உள்ளன.

அந்தக் கட்சிகளுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களையும், ஜே.வி.பி. 6 ஆசனங்களையும் மற்றும் ஈ.பி.டி.பி. ஓர் ஆசனத்தையும் கொண்டுள்ளன. நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி அதிக ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்லும். அதன்படி, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மஹிந்த அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். அந்தக் கட்சியுடன் சண்டை பிடித்துக்கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.

அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை. அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய் அமரட்டும். அதற்காக அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர முடியாது.

அவ்வாறு கோர முடியாது என்று அவர்கள் நன்கு அறிவர். இருந்தும், வெறுமனே சிங்கள மக்களைக் குழப்பி தமிழர்களுக்கு எதிராக இனவாதத்தை விதைத்து அரசியல் இலாபம் அடைவதே மஹிந்த அணியினரின் திட்டம்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கு சம்பந்தனுக்கு இருக்கின்ற அரசியல் உரிமை, நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மஹிந்த அணியினரின் அரசியல் இலாபத்துக்காக இவற்றை நாம் விட்டுக்கொடுக்கமாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

12Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*