ஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி!

“ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெலபொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் மதிப்பீடு பணிக்கூடம் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இன்று காலை நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்தாவது-

எமது மாகாண அலுவலர்கள் சிலரின் நடவடிக்கைகளை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். மத்தி என்ன நினைக்குமோ, மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ, மத்திக்கு ஏற்றவாறு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும், அவ்வாறு நடந்தால் தான் சலுகைகளை பெறலாம் என்ற மனோநிலையில் அவர்கள் நடந்து வருகின்றார்கள்.

உதாரணத்திற்கு ஒரு உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. அதற்கு தெற்கத்தைய உணவகங்களின் சிங்களப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்தி எதிர்பார்த்தது. ஹெலபொஜூன் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. நான் அதற்கு சம்மதிக்கவில்லை. வேண்டுமெனில் ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கத்தைப் பாவிக்கலாம் என்றேன். அதாவது ஹெல – ஈழம், பொஜூன் – உணவகம் என்றவாறு ஈழ உணவகம் என்று பெயர் வைக்கலாம் என்று மத்திய அமைச்சருக்குக் கூறினேன். அதற்கு சம்மதிக்கவில்லை.

அவ்வாறாயின் எமது வட மாகாண அதிகாரத்தின் கீழ்வரும் உணவகங்கள் போன்று அம்மாச்சி என்று பெயர் சூட்டுவோம் என்றேன். அதற்கும் எதுவும் கூறவில்லை. உணவகத்தைத் திறக்கவும் வரவில்லை. உணவகம் திறக்கப்பட்டு விட்டாலும் எமது அலுவலர்கள் இதுவரையில் அதற்குப் பெயரிடவில்லை. அவ்வளவு பயம் மத்திக்கு.

மத்திய அரசின் என்ன கூறுவார்களோ என்று தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலைமையையே நான் இங்கு காண்கின்றேன். மக்களின் ஆதரவை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள் என்பதை இங்குள்ள அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை.

மத்தியின் அதிகாரம் எப்பொழுது திரும்பவும் வரும் மத்திக்கு காக்காய் பிடித்து எமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறுநிறைவேற்றலாம் என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள் போல் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*