அழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவேன்! ஹட்டனில் மைத்திரி

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் கடந்த காலங்களில் பல எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவ்வாறு அழிக்கப்பட்ட இடங்களில் மீண்டும் தொண்டமானின் பெயரை பொறிக்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”இந்த நாட்டில் பிரித்தானியரின் காலணித்துவ காலப்பகுதிக்கு பின் மலையக பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றி வந்த தலைவரான மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை எவராலும் அழிக்க முடியாது.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் எங்கெல்லாம் இவரின் பெயர் அழிக்கப்பட்டுள்ளதோ அல்லது மாற்றம் செய்யப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அவரின் பெயரை மீண்டும் புதுப்பிக்க பணிப்புரை விடுத்துள்ளேன்.

பல்வேறு துன்பங்களை எதிர்கொண்ட மலையக மக்கள், தொண்டமானின் உன்னத சேவையால் இன்று ஓரளவுக்கு தங்களை அபிவிருத்தியிலும் வாழ்க்கைத் தரத்திலும் உயர்த்திக்கொண்டுள்ளனர் என்பதை மறக்கமுடியாது.

மேலும், எமது நாட்டிற்கு வெளிநாட்டு பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கும் மலையக மக்களின் உழைப்பை கடந்த காலங்களில் பெருந்தோட்ட நிர்வாகங்கள் சூறையாடி வந்துள்ளன.

உழைப்பின் ஊடான ஆதாயத்தை பெற்றுக்கொள்ளும் இவ்வாறான நிர்வாகத்தினர் இம்மக்களுடைய அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வதில் அக்கறைக் கொள்ளவில்லை. இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது குறிக்கோள்.

இதேவேளை, மலையக மக்களிடத்தில் இன்று போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டுவந்து அவற்றை மலையக பிரதேசங்களில் விற்பனை செய்வதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

18Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*