யாழ் மண்டைதீவில் சர்வதேச தரத்திலான புதிய மைதானம்!

யாழ் மண்டைதீவில் சர்வதேச தரத்திலான புதிய மைதானம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உப சபாநாயகரும் இலங்கை கிரிக்கட் நிறுவனத் தலைவருமான திலங்க சுமதிபால இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

பலாலி விமான நிலையத்தினை வந்தடைந்த குழுவினரை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் பின்னர் மைதானம் அமைக்கப்படவுள்ள மண்டதீவிற்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட வட மாகாண ஆளுநர், ‘தென்னிலங்கையில் மட்டுமல்ல வட மாகாணத்திலும் விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்காக சர்வதேச விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதற்கு கௌரவ திலங்கசுமதிபால அவர்கள் பாரிய நிதியினை ஒதுக்கீடு செய்தமைக்காக நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

பின்தங்கிய நிலையில் இருக்கும் வட மாகாணத்தில் இதனை அமைப்பதன் மூலம் இங்கே விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்பதோடு சர்வதேச நாடுகளின் விளையாட்டு வீரர்களுடன் இங்கே எமது வீரர்கள் யாழ் மண்டைதீவு விளையாட்டு மைதானத்தில் விளையாட கூடிய சந்தர்ப்பங்கள் எழும் என்று எண்ணுகின்றேன்.

அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் வட மாகாணத்தின் மண்டைதீவில் இந்த மைதானம் அமைக்கப்படவுள்ளது. இந்த ஆண்டிலேயே இதனை ஆரம்பிப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*