மைத்திரியின் அறிவிப்பால் கதி கலங்கியுள்ள கொழும்பு அரசியல்…

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 96 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருந்தால், நாளைக்கே தனித்து ஆட்சி அமைக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை தனித்து அமைக்க முடியும் என்றும் ஜனாதிபதி எடுதுக் கூறியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இரத்னபுரவில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை தனித்து அமைப்பதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மத்திய வங்கியின் பிணைமுறி நிதிமோசடி விவகாரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட ஊழல் மோசடிகள் போன்றவற்றால் நல்லாட்சி அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மலையகத் தமிழ் முஸ்லிம் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு பிரதான அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆனாலும் சாதாரண பெரும்பாண்மை கூட இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 96 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், தனித்து ஆட்சி அமைக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளமை தேசிய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதுவும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு அறிவித்தமை ஐக்கியதேசியக் கட்சிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுவதாக செய்தியாளர் தெரிவித்தார்.

39Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*