ஆங்கிலம் முதன்மைப்படுத்தப்படும் தமிழ் மரபுரிமை திங்கள் விழாக்கள்!!! அடிமைப்புத்தியின் வெளிப்பாடா???

கனடாவெங்கும் தமிழ் மரபுரிமைத் திங்கள் விழாக்கள் களை கட்டியுள்ளன. வரவேற்க்கத்தக்க விடயம். ஆனாலும் அடிப்படைத்தவறுகள் உடன் சுட்டிக்காட்டப்படவேண்டியவை. தமிழ் மரபுரிமைத் திங்கள் கொண்டாடப்படுவதன் அடிப்படை நோக்கம் என்ன? உலகின் தொன்மையான மொழி ஒன்றின் சொந்தக்காரர்களாகிய நாம் அதன் அங்கீகாரத்தை பெறும் அதேவேளை புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்மொழி எம்மிடம் தொடர்ந்தும் வாழ்வதை உறுதிப்படுத்தல் இங்கு முதன்மை பெறுகிறது. அவ்வாறாயின் எமது அடுத்த சந்ததியிடம் இப்பொறுப்பு சென்றடைவதை இவ்விழாக்கள் முதன்மையாக கொண்டவையாக இருத்தல் வேண்டும். அவ்வாறாயின் தம் தாய்மொழி குறித்து அவர்கள் பெருமை கொள்ளும் வகையில் செயற்பாடுகள் அவர்களை முதன்மைப்படுத்தி நடைபெறவேண்டும். இரண்டாவது தமிழ் மொழியின் தொன்மை பெருமை சாதனை ஏனைய இனத்தவர்களை சென்றடையும் வகையில் பேச்சுக்கள் நிகழ்வுகள் ஒருங்கமைக்கப்படவேண்டும். தமிழர் கனடாவிற்கு வந்ததை பேசுதல் தமிழர் வரலாறு அல்ல. மரபுரிமைத் திங்கள் விழாக்களுக்கு அனைவரும் சென்று வருகின்றீர்கள். என்னால் இவ்வருடம் முடியவில்லை. நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கை தொடர்கிறது. எனினும் அது குறித்த காணொளிகளை தொடர்ந்தும் பார்த்து வருகின்றேன். நான் அடிப்படை என்று குறிப்பிட்ட விடயங்கள் அங்கு கைக் கொள்ளப்பட்டனவா? கைக்கொள்ளப்படுகின்றனவா? என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன்.

சில வருடங்களுக்கு முன்னர் கனடிய பூர்வீக குடிகளின் நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக கமில்டன் நகருக்கு சென்றிருந்தேன். 1500 பேர் கலந்து கொண்ட பாரிய நிகழ்வு அது. அதில் 500 பேருக்கு மேற்ப்பட்டவர்கள் பூர்வீக குடியல்லாதோர் அதுவும் பலதுறைகளில் முதன்மையான கனடியர்கள் கலந்து கொண்டனர். அறிவியல் விஞ்ஞானம் விளையாட்டு கலை என பல்துறைகளில் தமது சாதனைகளின் கொண்டாட்டமாகவே அவ்விழாவை பூர்வீக மக்களும் அவர்களின் தலைமையும் ஒருங்கமைத்திருந்தனர். அவர்களின் தலைவரின் பேச்சு வந்தபோது தம் மக்களின் பாரம்பரிய உடையில் அவர் தோன்றினார். நேரடியாகவே தமது மொழியில் அவர் தன் பேச்சை ஆரம்பித்தார். 5 நிமிடங்கள் தொடர்ச்சியாக பேசினார். குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக விளங்காவிட்டாலும் அனைவரும் செவிமடுத்தனர். பின்னர் இதன் சுருக்கத்தை சொல்லுகிறேன் என ஆங்கிலத்தில் இரு நிமிடங்கள் சொன்னார். முடிவில் அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பினர். தன் தளத்தில் உறுதியாக நின்று தன் இனத்திற்கான அங்கீகாரத்தை அவர் பெற்றார். பார்ப்பதற்கு மிகவும் பெருமையாக இருந்தது. தமிழ் மரபுரிமைத் திங்கள் கொண்டாடும் நாம் எந்த மொழியின் முதன்மைக்காக கொண்டாடப்படும் நிகழ்வில் அதைப் புறம்தள்ளி ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுப்பது சரியா? அவ்வாறாயின் ஆங்கிலத்தமிழ் மரபுரிமைத் திங்கள் என கொண்டாட வேண்டியது தானே! பூர்வீக குடிகள் நடாத்தியது போல் வேற்று இனத்தவர்கள் 40 சதவீதம் எம் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. அதிகபட்சம் 5 சதவீதம் கூட கலந்து கொள்வதில்லை. இருந்தும் தமிழ் மொழி பின்தள்ளப்பட்டு ஆங்கிலம் முதன்மைப்படுத்தப்படுவது தொடரும் அடிமைப்புத்தியின் வெளிப்பாடா?

நிகழ்வுகள் பேச்சுக்கள் அறிவிப்புக்கள் மட்டுமல்ல அழைப்பிதழ்கள் கூட எவ்வித தமிழ் சொற்களும் அற்று வெளியாவது மிகுந்த வேதனை தருகிறது. இங்கு தான் ஒரு கேள்வி எழுகிறது. தமிழ் மரபுரிமைத் ;திங்கள் என்பது தமிழ்மொழி தமிழ்இனம் சார்ந்து அதன் நலன் சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற அதன் நோக்கம் சமீப காலமாக பின்தள்ளப்பட்டு தமிழ் மரபுரிமைத் திங்கள் விழாக்கள் அமைப்புக்கள் தனிநபர் நலன்சார்ந்து அவர்களின் இருப்பிற்கான கருவியாக மாற்றப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுவது இங்கு தவிர்க்க முடியாதது ஆகியுள்ளது. அவ்வாறாயின் அவ்வாறான முன்னெடுப்புக்கள் இவ்வாண்டில் இருந்து நிறுத்தப்பட்டாக வேண்டும். இவ்விழாக்களை முன்னெடுப்போர் கைக்கொள்ள வேண்டிய குறைந்த பட்ச நடைமுறைகள் வகுக்கப்படாக வேண்டும். அவை தமிழ் மரபுரிமைத்திங்களின் நோக்கத்தை பிரதிபலிப்பவையாகவும் அதில் எவ்வித விட்டுக் கொடுப்பிற்கும் இடம் கொடுக்காமலும் அமைய வேண்டும். இது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதையும் இங்கு வலியுறுத்தியாக வேண்டும்.

தமிழ் மரபுரிமைத் திங்களில் ஏனைய இனத்தவர்கள் கலந்து கொள்ளும் போது அவர்களுக்கான புரிதலாக பல முறைகளில் அதைச் செய்யலாம். லெட் திரைகளைப் பயன்படுத்துவோர் தமிழில் அறிவிப்புகள் மேற்கொள்ளப்படும் போது அவற்றை ஆங்கிலத்தில் அதில் சம காலத்தில் வெளியிடலாம். விழாமலர் வெளியிடுவோர் அதில் அதற்கான விளக்கங்களை ஆங்கிலத்தில் வெளியிடலாம். தமிழ் அறிவித்தல்களின் பின் ஆங்கிலத்தில் சுருக்கமாக சொல்லலாம் என பலவழிகள் உண்டு. யூதர்கள் ஆனாலும் சரி சீனர்கள் ஆனாலும் சரி பிரஞ்சு மொழி பேசுபவர்கள் ஆனாலும் சரி யப்பானியர்கள் ஆனாலும் சரி ரஸ்சியர்கள் ஆனாலும் சரி ஏன் பூர்வீக குடிகள் ஆனாலும் சரி அனைவரும் தம் மொழியை தம் நிகழ்வுகளில் எவ்வித விட்டுக் கொடுப்புமின்றி பயன்படுத்தும் போது நாம் மட்டும் தமிழ் மரபுரிமைத் திங்கள் என சொல்லிவிட்டு எம் மொழியை புறம்தள்ளுவது சரியா? சொல்லுங்கள்… இருக்க தமிழ் மொழியின் தொன்மை இனத்தின் நீண்ட வரலாற்றை பேச வேண்டியவர்கள் 1986 இல் நியூபின்லாந்தில் தமிழரின் தரையிறக்கத்துடன் தமிழர் வரலாற்றை பேசுவது அனைத்திலும் மோசமான அபத்தம். கருத்துக்கள் சுதந்திரமானவை. ஆரோக்கியமான கருத்துகளமாக இது விரியட்டும். அவை கருத்துக்களாக மட்டும் அமையட்டும் எவ்வித தனிநபர் சார்ந்தோ அமைப்பு சார்ந்தோ தயவு செய்து வேண்டாம்….

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*