பிளவு ஆரம்பம்! ஐ.தே.க. உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவு

208

தேசிய அரசாங்கம் நீடிக்குமா என்ற சந்தேகம் வலுப்பெற்று வந்த நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சுனில் லெஸ்லி உள்ளிட்ட பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்துள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 60 பேர் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்து ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு பாடுபடவுள்ளதாக தெரிவித்ததாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த உறுப்பினர்களுக்கான உறுப்புரிமை வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொலன்னாவ தொகுதி பிரதான அமைப்பாளர் பிரசன்ன சோலங்க ஆராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலம், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நிறைவடைந்தது.

தேசிய அரசாங்கம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை நீடிக்குமென இரு தரப்பினரும் குறிப்பிட்டு வந்தாலும், அதனை நீடிப்பது குறித்து எவ்வித கருத்துக்களையும் இரு தரப்பினரும் வெளியிடவில்லை. அத்தோடு, இரு கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதிலேயே தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து மஹிந்த அணியைச் சேர்ந்த மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எனினும், தேசிய அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து முதல்தடவையாக இன்றைய தினம் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவளித்துள்ளனர்.

குறிப்பாக அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக அமைந்துள்ள மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தாம் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இவ்விடயம் காரணமாக அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் கசிந்திருந்த நிலையில், தற்போது ஐ.தே.க.வினர் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை அரசியல் வட்டாரத்தில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.