புதுக்குடியிருப்புச் சிக்கலை ஆராய தனிப் பொலிஸ் குழு!

148

புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்கான தேர் தலை நடத்துவதா விடுவதா என்பது குறித்துத் தேர்தல் ஆணைக்குழு முடிவெடுப்பதற்கு முன்பாக அது பற்றி ஆராயத் தனிப் பொலிஸ் குழு ஒன்று அங்கு நேரில் சென்று ஆராயவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனுவில் கையெழுத் திடச் சென்ற பெண் ஒருவர் அதே கட்சியைச் சேர்ந்தவர்களால் தடுக்கப் பட்டார் என்ற முறைப்பாட்டின் கீழேயே இந்தக் குழு ஆராயவுள்ளது.

அந்தப் பொலிஸ் குழுவின் அறிக்கைக்கு அமைவாகவே தேர்தலை நடத்துவதா இல்லையா என்கிற முடிவை ஆணைக்குழு எடுக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடவிருந்த தமது அமைப்புச் சார்பான பெண் ஒருவரைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவமோகனின் ஆதரவாளர்கள் தடுத்து, மிரட்டி, அடைத்து வைத்து அவரை வேட்புமனுவில் கையெழுத்திடவிடாது திருப்பி அனுப்பினர் என்று புளொட் அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டிருந்தது.

இந்த விவகாரத்தைப் பாரதூரமானதாகக் கருதும் தேர்தல்கள் ஆணைக்குழு புதுக்குடியிருப்பு சபைக்கான தேர்தலை இடைநிறுத்துவது குறித்தும் ஆராய்ந்தது. கடந்த 8 வருடங்களாக அந்தச் சபைக்குத் தேர்தல் நடத்தப்படாதுள்ளதைக் கருத்தில்கொண்டு முறைப்பாடு குறித்துத் தீவிரமாக விசாரித்தறிவது என்கிற முடிவை ஆணைக்குழு எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய, சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நாளைமறுதினம் திங்கட் கிழமை தனிப் பொலிஸ் குழு செல்லவுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுடனும் கலந்துரையாடவுள்ளது. பொலிஸாரின் அறிக்கையைப் பொறுத்து ஆணைக்குழுவின் நடவடிக்கை அமையும் என்று தெரிவித்தார்.

மேலும், சகல பிரதேசங்களிலும் சமய வழிபாட்டு இடங்களில் தேர்தல் பரப்புரைகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

அது தொடர்பாக முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. சமயத் தலங்களில் அரசியல் பேச்சுக்கள் நடத்தப்படுவதுடன் சிலர் தமது தேர்தல் அறிக்கையைக்கூட அங்கு வைத்து வெளியிட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

வழிபாட்டு இடங்களில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. இதனை மீறி நடந்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கும் வழிபாட்டு இடங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

சமயம் என்பது வேறு அரசியல் என்பது வேறு, இரண்டையும் தொடர்புபடுத்த முடியாது. அதேபோல் சமயத்துடன் கூடிய வகையில் அரசியலை திணித்து மக்களை தவறாக வழிநடத்தும் செயற்பாடாக இவை அடையாளபடுத்தப்படும். சகல கட்சிகளும் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.