பொலிஸாரின் துன்புறுத்தலால் குமுறும் யாழ். துன்னாலை வாசிகள்

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததன் பின்னர் யாழ்.வடமராட்சி துன்னாலைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, பொலிஸார் ஆரம்பித்த கைது வேட்டை முடிவின்றி தொடர்வதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நான்கு மாதங்களை கடந்துள்ள நிலையிலும், இப்போதும் பொலிஸார் தேடி வந்து தம்மை துன்புறுத்துகின்றனர் என்றும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பொலிஸாரின் அத்துமீறல் தொடர்பில் முறைப்பாடு ஏதும் இதுவரையில் கிடைக்கவில்லை. மக்கள் பயப்படத் தேவையில்லை. எந்தத் தயக்கமும் இன்றி எனது அலுவலகத்தில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். முறைப்பாடு செய்யப்பட்டால், பொலிஸார் மீது பாரபட்சம் இன்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்று நெல்லியடிப் பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பொலிஸ் வாகனங்கள், பொலிஸ் காவலரண்கள், மீது அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பலரைப் பொலிஸார் தேடி வந்தனர்.

சந்தேகநபர்களைக் கைதுசெய்கின்றோம் எனத் தெரிவித்து துன்னாலைப் பகுதியைச் சுற்றிவளைத்துப் பொலிஸார் பல தடவைகள் தேடுதல் நடத்தினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நிலைமை கட்டுமீறியதை அடுத்து ஜனாதிபதி மட்டம் வரையில் இந்தவிடயம் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் பின்னர் பொலிஸார் சற்று ஓய்ந்திருந்தனர் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கொஞ்சக் காலமாக பொலிஸாரின் செயற்பாடுகள் ஓய்ந்திருந்தன. இப்போது மீண்டும் அத்துமீறத் தொடங்கி விட்டார்கள். இரவு நேரங்களில் வீடுகளுக்குள் நுழைகின்றார்கள். சப்பாத்துக் கால்களால் படலைகளையும் வீட்டுக் கதவுகளையும் உதைந்து உடைக்கிறார்கள்.

துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட பொலிஸார் கூடப் பிணையில் வெளிவந்து விட்டார்கள். ஆனால், எங்களை நிம்மதியாக வாழ விடுகின்றார்கள் இல்லை. அச்சத்துடனேயே வாழவேண்டிய நிலையில் இருக்கின்றோம்” என்று மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, தொந்தரவு கொடுக்கும் பொலிஸார் தொடர்பில் முறையிட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த உறுதி வழங்கினார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*