தூக்குத் தண்டனை என்ற பெயரில் அரசே கொலை செய்யக்கூடாது!- கௌசல்யா

கண்ணெதிரே சங்கரை இழந்த எனக்கு, உயிரின் மதிப்பு என்ன என்பது நன்றாகத் தெரியும்.

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள ஒருவரின் மனப்போராட்டம் விவரிக்க முடியாத அளவுக்குக் கொடுமையானது. அந்த வலியை மிகக்கொடிய எதிரிகள் கூட அனுபவிக்கக் கூடாது.

தூக்குத்தண்டனை என்ற பெயரில் ஒரு திட்டமிட்ட கொலையை அரசே செய்யக்கூடாது என்பது என் கருத்து என்கிறார் உடுமலை கௌசல்யா.

உடுமலைப்பேட்டையில், 2016-ம் ஆண்டு சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில், சங்கரின் மனைவி கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தும், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரை விடுதலை செய்தும் திருப்பூர் வன்கொடுமைத் தடுப்புச் சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

அதைத்தொடர்ந்து, கௌசல்யா, தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வி வருமாறு,

தீர்ப்புக்குப் பிறகு உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

என்னுடைய போராட்டம் வீண்போகவில்லை. இந்தத் தீர்ப்பு, சாதிவெறியர்களுக்கு அச்சத்தை உண்டாக்கும், ஒரு மனத்தடையை உருவாக்கும். அந்த வகையில், இந்தத் தீர்ப்பை வரவேற்கிறேன்.

அதேநேரத்தில், அந்த மூவரின் விடுதலை என் சிறகுகளை முறித்து விட்டது போன்ற உணர்வைத் தருகிறது. அதற்காக முடங்கி விட மாட்டேன். நீதிக்கான சட்டப் போராட்டத்தையும், களப் போராட்டத்தையும் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வேன்.

உங்கள் தாய்க்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அவரை ‘தாய்’ என்று அழைக்க விரும்பவில்லை. ஆனாலும், அவருக்குச் சில கேள்விகளை முன்வைக்கிறேன். ‘உங்களுக்குள் இருக்கும் சாதிவெறியால் நீங்கள் இழந்ததே அதிகம். அந்த சாதிவெறியால் இனி நீங்கள் பெறப்போவது ஒன்றுமில்லை. இதை இப்போதாவது உணர்கிறீர்களா?

உங்களுடைய சாதிக்கூட்டத்தில் நீங்கள் கௌரவமாகப் பார்க்கப்படலாம். ஆனால், பொதுச்சமூகத்தில் நீங்கள் வெறும் கொலையாளிகளாக மட்டுமே பார்க்கப்படுகிறீர்கள். அதை, இப்போதாவது புரிந்துகொண்டீர்களா?’ இனியாவது சாதியைத் தூக்கியெறிந்து விட்டு, மனிதர்களாக மறுபிறவி எடுப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்தத் தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வரவேற்று வருகிறார்கள். ஆனால், பிரதான அரசியல் கட்சிகள் உங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. அது குறித்த வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா?

இங்கு தேர்தல் அரசியல் என்பது சாதி வெறிக்குத் துணை போகிறது என்பதை நன்றாகப் புரிந்து வைத்துள்ளேன். சங்கர் படுகொலை செய்யப்பட்ட போது, முக்கியமான அரசியல் கட்சிகள் கள்ள மௌனம் காத்தன. அவர்கள் எதிர்மறையான செயல்களில் ஈடுபட்டார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இப்போது வரை இடதுசாரி இயக்கங்கள், பெரியாரிய – அம்பேத்கரிய இயக்கங்கள், தமிழ்த் தேசிய இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக நீதி அமைப்புகள் போன்ற அனைவரும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். அதனால், நான் தனித்து விடப்பட்டதாகக் கருதவில்லை.

பிரதான அரசியல் கட்சிகள் ஆதரிக்கவில்லையே என்ற ஏக்கமோ, கவலையோ எனக்குத் துளியும் இல்லை. தமிழ் மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது.

சாதிய வன்கொடுமைகள், சாதிய ஆணவக் கொலைகள் போன்றவற்றை எதிர்க்காதவர்கள், இங்கு தேர்தல் அரசியலில் வெற்றி பெறுவது விநோதம்.

ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பவர்களால் பெரிய அளவில் வெற்றி பெற முடிவதில்லை. இந்த நிலை மாறும் என நம்புகிறேன்.

இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், உங்களுக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவே?

சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய கொள்கைகள் இப்போது என்னுள் நிறைந்துள்ளன. முன்பு, இரத்த உறவுகள் மட்டுமே என் ஒரே சொந்த பந்தங்களாக இருந்தனர். ஆனால், இப்போது எனக்குக் கொள்கை வழி உறவுகள் நிறைய பேர் கிடைத்துள்ளனர். இரத்த உறவைத் தாண்டி, இந்த உறவுதான் இறுக்கமாகவும் ஆழமாகவும் தொடர்கிறது.

உறுதியான மனிதர்கள் சூழ்ந்ததாக என் வாழ்க்கை மாறியிருக்கிறது. அதற்கேற்ற வகையில், உடையிலிருந்து உள்ளம் வரை கம்பீரமானவளாக, நிமிர்ந்து நிற்கும் பெண்ணாக நான் உருமாறியிருக்கிறேன்.

மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு, அவர்கள் மீது வலுவான ஆதாரங்களைக் காவல்துறை தரத் தவறிவிட்டதே காரணம் என்று நினைக்கிறீர்களா?

இல்லை. இந்த வழக்கில் ஆரம்பம் முதல் இறுதி வரை காவல்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. காவல்துறையின் உழைப்பை அருகில் இருந்து பார்த்தவள் என்ற முறையில், அவர்களை எந்த வகையிலும் குறைசொல்ல முடியாது.

கௌசல்யாவின் தினசரி வாழ்க்கை இப்போது எப்படி இருக்கிறது?

பறை இசை பயில்கிறேன். கராத்தே கற்கிறேன். அம்பேத்கர், பெரியார் நூல்களைத் தினமும் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ‘சங்கர் தனிப் பயிற்சி மையம்’ மூலமாக குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தருகிறோம், பறை, சிலம்பம் உள்ளிட்ட தமிழ்க் கலைகளையும் கற்றுத் தருகிறோம்.

இந்தச் சமூகத்தை மாற்றும் ஒரு சிறு புள்ளியாக இதைப் பார்க்கிறேன். இப்போது, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக, காதலர்களின் பாதுகாப்புக்காக, சங்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பிக்கும் வேலைகளில் இருக்கிறேன்.

சங்கர் இல்லாத வீட்டில், உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?

சிறையில் உள்ள ஒரு கைதி, பகல் நேரத்தில் விளையாடலாம். அந்த விளையாட்டில் பல முயற்சிகள் செய்து வெற்றியும் பெறலாம். ஆனால், மாலையில் தனிக் கொட்டடிக்குள் அடைபட்ட பிறகு, அவருடைய உலகத்தில் தனிமையும் ஆற்றாமையும்தான் அதிகமாக இருக்கும்.

அதேபோல, நான் எவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவில் இருந்தாலும், என் ஆழ்மனம் என்றுமே தனிமை உணர்வுடன் தான் இருக்கிறது. இப்போது அது எனக்குப் பழகியும் விட்டது. சங்கர் அவ்வளவு உயர்வானவன்.

இந்த ஒன்றரை வருடங்களில், பொதுவாக தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகள், வேதனைகள் பற்றி நீங்கள் அறிந்துகொண்டது என்ன?

கீழ்வெண்மணி, முருகேசன் – கண்ணகி, மேலவளவு முருகேசன் போன்றோரின் படுகொலைகள் பற்றி முன்பு எனக்குத் தெரியாது. அதுபோன்ற சாதியப் படுகொலைகளைப் பற்றி இப்போது நன்றாக அறிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன்.

சமீபத்தில், நந்தினி மீதான பாலியல் வன்கொடுமைத் தாக்குதல் என்னை உலுக்கிப்போட்டது. அனிதாவின் மரணம், சாதியத்தின் கோர முகத்தையே எனக்குக் காட்டியது. இன்றைக்கும் ஊரும் சேரியும் தனித்தனியாகவே இருக்கின்றன. இரட்டைக்குவளை போன்ற தீண்டாமை வன்கொடுமைகள் நீடிக்கின்றன.

எனவேதான், சாதியை எதிர்த்துப் போராடி வருகிறேன். என் சங்கரின் படுகொலைக்கு நீதி கிடைக்க, முன்பின் தெரியாத பலரும் கடுமையாக உழைத்தார்கள். அதேபோல நானும், முன்பின் அறியாத, எந்தவித உறவுமில்லாத மனிதர்கள் மீது நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக உழைக்க விரும்புகிறேன். இது என் வாழ்நாள் கடமை.

நான் ஒரு போராளியாக, ‘தோழர் கவுசல்யா’வாக வாழ்நாள் முழுவதும் மக்களுக்கான போராட்டக் களத்தில் நிற்பேன்.

சாதியை மறுத்து காதல் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன?

உங்கள் காதலில் அசைக்க முடியாத உறுதியுடன் இருங்கள். யாருக்காகவும், எதற்காகவும் காதலை விட்டுக் கொடுக்காதீர்கள். முடிந்தவரைப் பெற்றோரின் சம்மதம் பெறப் போராடுங்கள். போராடிப் பயனில்லை என்ற நிலை ஏற்பட்டால், துணிவுடன் முடிவெடுங்கள். திருமணம் செய்து கொண்டு, சாதியற்றவர்களாக வாழுங்கள். பிள்ளைகளையும் சாதியற்றவர்களாய் வளருங்கள்.

– Vikatan

29Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*