பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அயோத்தி வழக்கு விசாரணை

84
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

சுப்ரீம் கோர்ட்டில் நேற்றுமுன்தினம் அயோத்தி நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சன்னி முஸ்லிம் வக்பு வாரியத்தின் சார்பில் வாதாடிய மூத்த வக்கீலான கபில்சிபல், 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை பிரதமர் மோடி கண்டித்துள்ளார்.

இதற்கிடையே, கபில்சிபலை அயோத்தி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் தங்களது வக்கீலாக நியமித்துள்ள சன்னி முஸ்லிம் வக்பு வாரியமும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அந்த வாரியத்தின் ஹாஜி மெகபூப் விடுத்துள்ள அறிக்கையில், “கபில்சிபல் எங்களுக்காக சுப்ரீம் கோர்ட்டில் வாதிடும் வக்கீல்தான். எனினும், அவர் ஒரு அரசியல் கட்சியை(காங்கிரஸ்) சேர்ந்தவர்.

அயோத்தி நிலப்பிரச்சினை தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் சுப்ரீம் கோர்ட்டில் வைத்த வாதம் தவறானது. மேல் முறையீட்டு மனுக்களை 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு விசாரிக்கவேண்டிய அவசியம் இல்லை. இதில் எவ்வளவு விரைவாக விசாரணையை முடிக்க முடியுமோ, அதற்குள் முடித்து தீர்வு காணவே நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறப்பட்டு உள்ளது.

சன்னி வக்பு வாரியம் கபில்சிபலுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதை நேற்று தகோத் நகரில் நடந்த குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தின்போது பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.