கிட்டண்ணைக்கான தீருவில் அஞ்சலியும் தலைவரின் பாதுகாப்பும்.!

1993 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், 16ஆம் திகதி, வங்கக்கடலில் வைத்து, கப்பலுடன் சேர்த்து தீயை மூட்டி அந்தத் தீயின் நடுவில் கம்பீரமாக நின்று, தம்மையும் எரித்து, கப்பலையும் அழித்தனர் புலிகள்.!

வீரச்சாவடைந்த கிட்டண்ணை, குட்டிஸ்ரீ அண்ணை, வேலம்மான் உட்பட 10 மாவீரகளுக்கு,17/01/1993ம் ஆண்டு, வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தீருவில் வெளியில், அஞ்சலி செலுத்துவதற்கு, புலிகளால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது.

அன்று 16 திகதி மாலை பொட்டம்மானை கூப்பிட்ட தலைவர், இந்த அஞ்சலி நிகழ்வில் தானும் பங்குபற்றப்போவதாகக் கூறினார். இதைக் கேட்ட அம்மான் குழப்பத்துடன் அண்ணையை பார்த்தார்.

ஏனெனில், போராளிகளின் வித்துடலுக்கு அஞ்சலி செலுத்துவதாகின், குறிப்பிட்ட இடத்தில் தலைவர் தனது அஞ்சலியை செலுத்துவார்.

இது அப்படியல்ல, குறிப்பிட்ட இடத்தில் மக்களால் மேற்கொள்ளப்படவிருந்த மலர் வணக்கம்.!

இதில் பல லட்சம் மக்கள் கலந்து கொள்வார்களென்று எதிர்பாக்கப்பட்டது.

அன்றைய நேரத்தில் யாழ்பாணத்தில் இருந்த அனைத்து வாகனங்களும், தீருவில் வெளிக்கு மக்களை அழைத்துச் செல்ல ஏற்பாடாகியிருந்தது. அப்படித்திரளும் மக்கள் வெள்ளத்தின் நடுவில், தலைவரை கொண்டுபோய் நிறுத்துவது, எவ்வளவு பெரிய ஆபத்தென்பதை உணர்ந்து, அம்மான் கவலையடைந்தார்.

எமது மக்கள் தலைவருக்கு அரணாக இருந்த போதும், சிங்கள அரசின் உளவாளிகள், மக்களோடு மக்களாக கலந்து, ஒரு தாக்குதலை மேற்கொள்ளலாம், அல்லது அந்த நேரத்தில் மாத்தையா அவர்களின் சதிநடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததினால், அவர் கூட ஒரு தாக்குதலை நெறிப்படுத்த முயற்சிக்கலாம்.!

இந்த இரு அபாயங்களையும் கருத்தில் கொண்டனர் புலிகள். அதனால், அண்ணையின் பாதுகாப்பை அம்மான் பொறுப்பெடுத்தார்.!

அதன்படி, அண்ணையின் வழமையான பாதுக்காப்பை கடாபியண்ணை, சொர்ணமண்ணை, மற்றும் தலைவரின் பாதுகாப்பு போராளிககள், அருகில் இருந்து பாதுகாப்பு கொடுப்பதெனவும்,

சிங்கள அரசின் விமானத்தாக்குதலை முறியடிக்கவென்று, கடற்புலிகளின் மற்றும் தரைப்படையின், 50கலிபர், 23MM,14MM கனொன் ஆயுதங்கள், வான் எல்லையை பாதுகாக்குமென்றும் முடிவெடுத்து, இரவோடு இரவாக அவைகள் நகர்த்தப்பட்டன.

அதே நேரத்தில், யாழ்பாணத்தில் இருந்த, அனைத்து புலனாய்வுத்துறைப் போராளிகளும், இரவோடு இரவாக தீருவிலை அண்டிய பிரதேசம் எங்கும் நகர்த்தப்பட்டு, மக்களோடு மக்களாக கலர்ந்தனர்.

அடுத்தநாள் தீருவிலை நோக்கி, மக்கள் எம் தேசத்து வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த, கூட்டம், கூட்டமாக மைதானத்தை நோக்கி வந்தனர். புலிகளின் உளவுத்துறைப் போராளிகள், மக்களோடு மக்களாக சந்தேகப்படுபவர்களின் பின்னால் நிலையெடுத்தனர்.

எல்லாம் கச்சிதமாக நிலை நிறுத்தப்பட்டதும், இந்த நடவடிக்கைகளை அம்மான் நேரடியாக சம்பவ இடத்திலிருந்து நெறிப்படுத்தினார்.!

எல்லோரும், அண்ணையின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருந்தபோது, அம்மானின் பாதுகாப்பு எமக்கு கேள்விக்குறியானது? அத்தோடு புலிகளின் முக்கிய தளபதிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டிய தேவை, புலனாய்வுப்போராளிகளுக்கு எழுந்தது.

அதன்படி, அவர்களுக்கும், சிறு, சிறு வளையமாக மக்களறியாது, பாதுகாப்பு போடப்பட்டது.

நாங்கள் அம்மானுக்கான பாதுகாப்பை உறுதிசெய்த போது, அதை அவர் மறுத்து, அதில் இருந்த கணிசமான போராளிகளை, அண்ணையின் பாதுகாப்புக்கு அம்மான் அனுப்பினார்.

தனது பாதுகாப்பை கருத்தில் எடுக்காது, அண்ணையின் மேல் மட்டுமே, அவர் கரிசனையாக நின்றார். இப்போதும் அதை நினைத்துப்பார்க்கின்றேன்.!

அம்மான் வோக்கியின் சுப்பர் ரொட்டை இழுத்து விட்டபடி, பஜிரோவின் பின் பக்கம் கால்வைக்கும் பவரில் ஏறி்நின்றபடி, கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தார்

அன்று முழுவதும், மனுஷன் பதட்டத்திலேயே இருந்தார்.!

அப்போது தான், அவரது அண்ணை மீதான பாசத்தை நாம் கண்டோம்.!

புலனாய்வு போராளிகள் எல்லோரையும், அம்மானால் ஞாபகம் வைத்திருக்க முடியாதென்பதால், அவர் அறியாத சில போராளிகளை, அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வைத்தே, அவருக்கான பாதுகாப்பை அன்று நாம் உறுதிசெய்தோம்.!

எல்லாம் கச்சிதமாக இருப்பதை உறுதிப்படுத்தியதும், அண்ணை வருவதற்கான அனுமதியை அம்மான் வழங்கினார்.

அதன்படி, அண்ணையும், தளபதிகளும் மக்கள் வெள்ளத்தின் மத்தியில், வீரத்தளபதிக்கும், போராளிகளுக்கும், தமது இதைய அஞ்சலியை செலுத்தினர்.

கிட்டண்ணையின் இழப்பு, தலைவரை எவ்வளவு தூரம், மனதளவில் தாக்கியது என்பதை, அன்று நாம் உணர்ந்தோம்.

அஞ்சலியின் பின், கிட்டம்மாவை (கிட்டண்ணையின் தாயார்) அணைத்து, தனது வருத்தத்தை தெரிவித்தார்.

எமது தாயகப் போராட்டத்தில், அந்த வீரத்தாயின் பங்கு அளப்பெரியது.

இறுதியில் அண்ணை புறப்பட்டு சென்றதும் தான், போராளிகள் இயல்புநிலைக்கு திரும்பினர்.

அம்மானும் நின்மதியாக முகாம் திரும்பினார்.!

ஒரு நிகழ்வுக்கு பின்னால் எமது போராளிகள் எவ்வளவு தூரம், அன்று பணியாற்றினார்கள் என்பதை இந்த சம்பவம் உங்களுக்கு தெளிவுபடுத்தும்.!

நினைவுகளுடன் துரோணர்.!!

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*