“ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய்..!” – நாசர் தகவல்

Loading...

தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை, தேடப்படும் ஃபைனான்ஸியர் அன்புச்செழியன்… என்று தமிழ் சினிமா ஒருபக்கம் பரபரப்பில் இருந்தாலும் மறுபக்கம் மலேசிய கலைநிகழ்ச்சிக்கு ஆரவாரமாக தயாராகிவருகிறது. நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்கத்துக்குப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதும் முதல்வேலையாக சங்கக் கட்டடம் கட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கடந்த ஆண்டு ஸ்டார் கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தி நிதி திரட்டினர். அதேபோல் அடுத்த ஆண்டு பிரமாண்டமான கலைநிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த உள்ளனர்.

2018 ஜனவரி மாதம் 6ம் தேதி நடைபெறும் இந்த கலைநிகழ்ச்சியில் நடிகர்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதற்கான தயாரிப்பு வேலைகளில் நடிகர் சங்க நிர்வாகிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசரிடம் பேசினேன். அவர் கூறியதாவது…

““மலேசியாவில் தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட், ஃபுட்பால் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதற்காக ஒவ்வொரு நட்சத்திரங்களையும் நேரிலும் அலைபேசியிலும் பேசி தகவல் தெரிவித்து வருகிறோம். முதல்கட்டமாக நானும், கார்த்தியும் சேர்ந்து ரஜினி சாரை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தோம். ‘மலேசிய கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைத்தோம். ‘நான் நிச்சயம் வர்றேன்…’ என்று உடனடியாக ஒப்புக்கொண்டார்.

அடுத்து நாங்கள் இருவரும் கமல் சாரை அவரின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து மலேசிய நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தோம். ‘கண்டிப்பா வர்றேன்’ என்று அவரும் உடனடியாக சம்மதம் தெரிவித்தார். அதன்பின் கேப்டன் விஜயகாந்த் அவர்களை சென்னை கோயம்பேடில் உள்ள அவரது கட்சியின் அலுவலகத்தில் சந்தித்தோம். எங்களைப் பார்த்ததும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். நடிகர்சங்க தலைவராக இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார். மலேசியா கலை நிகழ்ச்சியில் கண்டிப்பா கலந்துக்கிறேன்’ என்று உறுதி தந்தார். இதேபோல விஜயையும் நேரில் சந்தித்து அழைத்தோம். ‘‘தவறாமல் கலந்துகொள்கிறேன்’ என்று அவரும் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். இதேபோல அனைத்து முன்னணி நடிகர், நடிகைகள் அனைவரும் முறையாக அழைக்கப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலானோர், ‘இது நம் குடும்ப நிகழ்ச்சி. நாங்கள் தவறாமல் கலந்துகொள்வோம்’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர். 

நிகழ்ச்சியில் கிரிக்கெட், ஃபுட்பால் ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் பிறகு நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்தக் கலைநிகழ்ச்சிக்கான பயிற்சிகள் சென்னையில் இப்போதே தொடங்கிவிட்டன. மலேசியாவில் புக்கட் ஜலில் ஒரே நேரத்தில் 80,000 மக்கள் அமரும் அளவுள்ள மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

முதலில் கிரிக்கெட் போட்டி. இதில் ஆர்யா, அதர்வா, விக்ராந்த், ஜீவா, விஷ்ணு விஷால்… போன்ற திறமையாக கிரிக்கெட் ஆடும் இளம் நடிகர்கள் விளையாடுகிறார்கள். அதன்பின் நடக்கும் ஃபுட்பால் விளையாட்டுப் போட்டியிலும் திரைப்பட நட்சத்திரங்களே பங்கேற்கிறார்கள். ஜனவரி 6-ம்தேதி மதியம் 12 மணிக்கு நட்சத்திர விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன. இந்தப் போட்டிகள் முடிந்தவுடன் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்ட மேடையில் நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. அப்போது ஒரே மேடையில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் தோன்றி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தவுள்ளனர். நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக நடத்தப்படும் இந்த கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதிலும் ஏற்பாடு செய்வதிலும் மற்றவர்களைப்போல எனக்கும் பெருமகிழ்ச்சியே!”

11Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*