காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் வழக்கினை ஒத்திவைத்தார் இளஞ்செழியன்!

10

1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்றத்தில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டதோடு புதிய 3 ஆட்கொணர்வு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட 3 ஆட்கொணர்வு மனு வழக்கினையும் எதிர்வரும் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒத்திவைத்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு யூலை மாதம் 19 ஆம் திகதி நாவற்குழி மறவன்புலோவைச் சேர்ந்த 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாவற்குழி வில்லு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 12 இளைஞர்களின் வழக்கு நேற்றைய தினம் (புதன்கிழமை) யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.

10 நபர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 9 நபர்களின் வழக்குகள் ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் ஆரம்ப கட்ட வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு, சாவகச்சேரி நீதிமன்றினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நடைபெற்ற போது, சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் அடையாளம் காணப்பட்டு, பின்னர் யாழ்.மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து மேற்படி வழக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறக்கூடாது என்பதற்காக அப்போதைய இராணுவத்தளபதி 2003 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.

2003 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வழக்கு 2017 ஆம் ஆண்டு வரை தமது உறவுகளைத் தொலைத்தவர்களுக்கு வழக்குத் தொடர்பான விடயங்கள் எதுவும் தெரியாது இருந்தது.

இந்த நிலையில், 2002 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்யாத மூவர் தொடர்பில் இன்றைய தினம் புதிதாக ஆட்கொணர்வு மனு இராணுவத்தினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களின் உறவினர்களில் மூவர் தாக்கல் செய்தனர்.

இதன்போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி, அந்த வழக்கின் தொடர்ச்சியாக அநுராதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில் மீள தன்னால் விசாரிக்க இயலாத நிலையைச் சட்டத்தரணிகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், அநுராதபுரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றதா, அவ்வாறு நிலுவையில் இருந்தால், அந்த வழக்கினை யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆலோசிப்பதாகவும் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அநுராதபுர நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மனு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதற்குரிய செயற்பாடுகளை சட்டத்தரணிகள் முன்னெடுத்து வருகின்றனர்.