தென்மாகாணம் காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலய மாணவிகள் கட்டுரைப் போட்டியில் சாதனை

14
பன்மைத்துவத்திலும் ஒற்றுமையே தேசத்தின் பலம் என்னும் தலைப்பில் கீழ் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட அகில இலங்கை ரீதியிலான சித்திரம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி.ஜே.மதுவந்தி, செல்வி.ஜே.தர்சினி ஆகிய இரு மாணவிகள் கட்டுரைப் போட்டியில் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுக்கான (அகில இலங்கையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு) பரிசில்கள் வழங்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவருமான கௌரவ சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் தலைமையில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் 2017.11.01(நேற்று) ஆம் திகதி நடைபெற்றது.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகமும், தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையமும் ஒன்pறணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வியமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கலந்து கொண்டதோடு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஜயசிங்க அவர்களும், தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களும், வெளிநாட்டு பிரமுகர்கள், மதகுருமார்கள், கல்வியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இம்மாணவிகளுக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் பாடசாலை அதிபர் திரு.இரா.சிறிகிருஸ்ணன், பிரதி அதிபர் திரு.வி.ஜீவராசா மற்றும் உதவி அதிபர் செல்வி.எம்.மிடோனாமலர் ஆகியோரினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
கலைஞர்.ஏ.ஓ.அனல்