கருணா – பிள்ளையானுடன் இணையும்; பசில்

14
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வடக்கில் செயற்படுகின்ற ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடமாகாணத்திலும் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கருணா அம்மான் மற்றும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தங்களுடன் இணைந்து கிழக்கிலும் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமைதாங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மேற்கொள்ளவுள்ள புதிய உத்திகள் தொடர்பில் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச இதன்போது தெளிவுபடுத்தினார்.

“ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் எமது கட்சி செயற்படுகிறது. அதுபோக பொதுஜன ஐக்கிய முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, தேசவிமுக்தி கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, கிழக்கிலுள்ள பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் எம்முடன் இணைந்துள்ளன.

வடக்கிலுள்ள சில கட்சிகளுடன் நாங்கள் இணைந்து கடந்தவாரம்தான் சில செயற்பாடுகளை ஆரம்பித்திருக்கின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக இருக்கின்ற கட்சிகளுடன் கலந்துரையாடி எம்முடன் இணைந்துகொள்வதற்காக அழைப்பை விடுப்போம். வடக்கிலும் நாங்கள் போட்டியிடவுள்ளோம்” என்றார்.

இதேவேளை ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களை தற்போது துன்புறுத்திவரும் எவரையும் பழிக்குப்பழி வாங்கமாட்டோம் என்றும் முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச கூறினார்.

“நாங்கள் ஆட்சிக்குவர முயற்சிப்பது யாரையும் பழிவாங்குவதற்கல்ல. விசேடமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தாருக்கு மேற்கொள்கின்ற இடையூறுகளினால் அதிக கோபம் எங்களுக்கு ஏற்பட வேண்டும்.

ஆனால் அப்படிப்பட்ட அரசியலை நாங்கள் செய்யப்போவதில்லை. எனினும் அதனூடாக பிழை செய்கிறவர்களுக்கு சுதந்திரம் வழங்குவோம் என அர்த்தப்படாது.

குற்றம் செய்கிறவர்களுக்கு பதில் வழங்கத்தான் வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் அரசியல் வேட்டையையே மேற்கொள்கின்றது. டி.பி ஏக்கநாயக்க அரசிலிருந்து விலகுவதாக கூறியதால் அவருக்கெதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு வெளியிடுகின்றோம். எமது அரசாங்கம் வந்தாலும் அவர் இருக்கின்ற அரசியல் கட்சியின் படி தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடாது. அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக விசாரணை மேற்கொள்ளத்தான் வேண்டும். நாங்கள் ஆட்சிக்குவர முன்னர் லிட்ரோ கேஸ் மற்றும் மத்திய வங்கி மோசடி போன்ற பல விடயங்கள் வெளிவரலாம்” என்று தெரிவித்தார்.