புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என நிருபிக்கவே அரசு செயற்படுகிறது

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருந்த சிறைக்கைதிகளை கொலை செய்தார்கள் என்பதை நிரூபித்து ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினருக்கு நிகராக அவர்களும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் நிரூபிக்கும் சதி முயற்சிகளில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என நிருபிக்கவே அரசு செயற்படுகிறது

இதனை அடிப்படையாக கொண்டே அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டள்ள தமிழ் அரசியல் கைதிகளை் உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்காது ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்துவருவதாகவும் வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று தற்போது ஓய்வில் இருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுத்துமூலம் கேட்ட கேள்விகளுக்கு அவர் எழுத்துமூலம் அளித்துள்ள பதில்களிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் நடைமுறையிலுள்ள மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம் அந்த வாக்குறுதியை இதுவரையில் நிறைவேற்றவில்லை எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுவது இலகுவாக இருந்திருக்கும் எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சுலக்சன் உட்பட தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் வழக்குகளை வவுனியாவில் இருந்து அநுராதபுர நீதிமன்றத்திற்கு மாற்ற முற்படுவதில் பாரிய சதித் திட்டமொன்று இருப்பதாகவும் முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதனாலேயே ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பில்லை என தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் இருந்து சிங்களப் பிரதேசங்களுக்கு வழக்குகளை மாற்ற முனைந்துள்ளதாகவும் முதலமைச்சர் சாடியுள்ளார்.

தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும் என்று கூறும் அவர், அவ்வாறு சாட்சியளிக்கப்படும் பட்சத்தில் தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக் கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்றபயமே வழக்கை அநுராதபுர நீதிமன்றிற்கு மாற்றியமைக்கான காரணம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவடையும் தறுவாயில், முன்னரே கைது செய்து வைத்திருந்த சிலரை தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்று நிரூபிப்பதற்காகவே குறிப்பிட்ட தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசியல் கைதிகள் மீதான இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு தடுப்பில் இருக்கும் வேறு சில கைதிகளை அரச சாட்சிகளாக மாற்றி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

எப்படியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் அரச படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் கூற முடியும் என ஸ்ரீலங்கா அரசாங்கம் கருதுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே தடுப்பில் இருக்கும் தமிழ் கைதிகளை அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*