தமிழரசுக் கட்சிக்கு எதிராக வெகுஜன குழு ஒன்று உதயம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும் என வவுனியா பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட சமூக அநீதிக்கு எதிரான அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று புதன்கிழமை மாலை வவுனியா பொது அமைப்புகள் ஒன்று கூடி கலந்துரையாடியதாகவும் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர் கூறியதாக செய்தியாளர் தெரிவித்தார்.

போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக வவுனியா பொது அமைப்புகள் ஒன்று சேர்ந்து, வவுனியா வெகுஜன போராட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் அந்த ஏற்பாட்டாளர் கூறியதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுப்பது எனவும் இனிமேலும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விவகாரங்களில் காலம் கடத்தாமல் துரிதமாக செயற்பட்டு விசாரணைகளை நடத்தி அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிப்பட்டதாக அந்த ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

அதேவேளை இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்திற்கு, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஆனால் சிவசக்தி ஆனந்தன் மாத்திரமே சமூகமளித்ததாகவும் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர் ஒருவர் செய்தியாளரிடம் கவலை வெளியிட்டார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*