மைத்திரிக்கு சம்பந்தன் வழங்கிய உத்தரவாதம்

புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் சமஷடி முறை இருக்கின்றது என சம்பந்தன் தனக்கு நெருக்கமான தமிழரசுக் கட்சியின் முத்த உறுப்பினர் ஒருவரிடம் கூறியுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இடைக்கால அறிக்கையில் சமஷ்டி இருப்பதாக தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் கடந்த வாரம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியமை தொடர்பாக கடசிக்குள் எழுந்த முரண்பாடுகள் குறித்து அந்த உறுப்பினர் சம்பந்தனிடம் விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் பழம்பெரும் தலைவர் என்ற முறையில் சம்பந்தன், சமஷ்டி குறித்து கூறியமை தொடர்பாக அந்த மூத்த உறுப்பினருக்கு ஒருவகையான நிம்மதி ஏற்பட்டது. ஆனாலும் சமஷ்டி எப்படிச் சாத்தியமாகும் என்பது குறித்து சில சந்தேகங்கள் அவ்வப்போது ஏற்பட்டதால் அரசியல் விமர்சகர்களிடம் அவர் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை, சம்பந்தன் நம்பும் அளவுக்கு சமஷ்டி முறைக்கான முக்கிய சரத்துக்கள் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் இருக்கின்றது அல்லது, பின்னர் சோத்துக் கொள்ளப்படும் என்றால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்லது ஜனாதிபதி மைத்திபால சிறிசேன ஏதாவது இரகசியமாக சொல்லியிருக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியதாக எமது செய்தியாளர் கூறினார்.

அவ்வாறு சம்பந்தனுக்கு உறுதி வழங்கக் கூடிய அரசியல் தற்துணிவு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் உள்ளதா என்பது கேள்வி. ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு நடத்துவதில் அவர்கள் இருவரும் பெரும்பாடுபடுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவ்வப்போது இருவருக்கும் இடையில் கூட சந்தேகங்கள், வேறுபாடுகளும் எழுகின்றன. அத்துடன் இருவரும் தத்தமது கட்சி உறுப்பினர்களுக்கு விசுவாசமாக செயற்பட வேண்டிய தேவையும் உள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை மைத்திபால சிறிசேனவுக்கு பல வகையான நெருக்கடிகள் உண்டு.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவ்வாறான பிரச்சினைகள் கட்சிக்குள் இல்லாதுவிட்டாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விலக்கிவிட்டு தனித்துஆட்சி செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் கட்சிக்குள் வலுவடைந்துள்ளன. ஆகவே இவ்வாறான இழுபறி நிலையில் சம்பந்தனுக்கு இரகசியமாக உறுதிமொழி கொடுக்கக்கூடிய தற்துணிவு நிலை ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ இருக்காது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் கோருகின்ற வடக்கு கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்ற கருத்துக்கள், சமஸ்டி ஆட்சி முறை என்ற பேச்சுக்கள் போன்றவற்றுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் வருகின்றனர்.

எனவே இவ்வாறான சிக்கல் நிலைமைகளுக்குள் இருந்து கொண்டு ஜனாதிபதியும் பிரதமரும் சம்பந்தனுக்கு இரகசியமாக உறுதிமொழி வழங்கி அல்லது தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வு வரும் என்று கூறும் அளவுக்கு நிலைமை இல்லை என்பது வெளிப்படையானது எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியதாக செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஆகவே செய்ய முடியாத காரியம் ஒன்றைச் சொல்லி தமிழரசுக் கட்சி எல்லோரையும் ஏமாற்றுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுவதாக செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

58Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*