ஐந்து பேய்களை அடித்துக் கொன்ற மலாவி மக்கள்

ஆபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்திய நாடான மலாவியின் தென் பகுதியில் இரத்தக் காட்டேரிகள் போன்று தம்மை உருவகப்படுத்திக் கொண்டு மக்களை அச்சுறுத்தி வந்த ஐவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், மனித இரத்தத்தை குடிக்கும் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவல்களையடுத்து மலாவியின் தென்பகுதியில் நிலைகொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை தனது உத்தியோகத்தர்களை அவசரமாக வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க நாடுகளில் இன்றும் மூடநம்பிக்கைகள் அதிகமாக வழக்கத்தில் உள்ளன.

இந்த நிலையில் ஆபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்திய நாடுகளில் ஒன்றான மலாவியில் பேய்கள் தொடர்பான வதந்திகள் அண்மைக்காலமாக அதிகமாக பரப்பப்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

இந்த பேய் அச்சம், முலான்ஜே மற்றும் பலொம்பி ஆகிய நகர மக்களையே அதிகமாக பாதித்துள்ளன.

பேய், மந்திர ஜாலங்களினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் இறப்புக்களை தவிர்க்கும் பொருட்டு மலாவி அரசாங்கம் இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்துள்ளது.

இதன் படி அங்கு இரவு 7 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரை 10 மணித்தியால ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளது.

மனிதர்களில் இரத்தத்தை குடிக்கும் இரத்தக்காட்டேரிகள் என அழைக்கப்படும் பேய்களிடமிருந்து தம்மையும் தமது அயலவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மலாவியின் தென்பிராந்திய மக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இரவு நேரங்களில் காவல் கடமைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த மக்களிடம் இரத்தக்காட்டேரிகளை போல் வேடம் தரித்து மக்களை அச்சுறுத்தி வந்த ஐவர் வசமாக சிக்கிக்கொண்டுள்ளனர்.

அச்சம் பீதி காரணமாக கடும் ஆத்திரம் மற்றும் விரக்தியில் இருந்த மக்கள் தம்மிடம் சிக்கிய 5 பேய்களையும் நையப்புடைத்ததால் அவர்கள் உயிரிழந்தும் உள்ளனர்.

இதேவேளை கடந்த 2002 ஆம் ஆண்டும் இதேபோன்று திடீரென பரவிய பேய்கள் தொடர்பான வதந்திகளால் மலாவியில் தென்பகுதிகளில் கலவரங்களும் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இம் முறை பேய்கள் தொடர்பான அச்சங்கள் எவ்வாறு பரப்பப்பட்டன என்பது தொடர்பில் தெளிவான விபரங்கள் எவையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

எனினும் பேய் பிசாசுகளின் அச்சம் காரணமாக மலாவியின் தென்பிராந்தியத்தில் கடமைகளில் ஈடுபடுத்தியிருந்த தமது அதிகாரிகளை அவசர அவசரமாக ஐக்கிய நாடுகள் சபையும் மீள அழைத்துக்கொண்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*