ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்தார் நாமல்

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச உட்பட மஹிந்த அணியைச் சேர்ந்த ஆறு பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் கணக்கின் ஊடாக இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றார்.

இதேவேளை நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்களை விளக்கமறியலில் வைப்பதற்காக நேற்றைய தினம் நள்ளிரவு சிறைச்சாலை வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டபோது வீதிகளில் டயர்களை போட்டு எரித்து எதிர்ப்பை வெளியிட்ட அவர்களது ஆதரவாளர்கள் இன்றைய தினமும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சீனாவின் கடன் உதவியுடன் மத்தள பகுதியில் அமைக்கப்பட்ட ஸ்ரீலங்காவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்கப் போவதாக குற்றம்சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் கடந்த ஆறாம் திகதி போராட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

ஹம்பாந்தோட்டையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு எதிரில் நீதிமன்றின் தடை உத்தரவையும் மீறி இடம்பெற்ற இந்தப் போராட்டத்தின் போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல்களும் வெடித்திருந்தன.

இதனையடுத்து அன்றைய தினமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் தொடர்ந்தும் பலர் கைதுசெய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த போராட்டத்தை ஏற்பாடுசெய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர்கள் ஆறு பேருக்கு விசாரணையொன்றுக்காக ஹம்பாந்தோட்டை பொலிசார் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதற்கமைய வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக நேற்றைய தினம் மாலை ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, டி.வீ.சானக்க, பிரசன்ன ரணவீர ஆகியோரும், தென் மாகாண சபை உறுப்பினர்களான உபாலி கொடிக்கார, சம்பத் அதுகோரள ஆகியோருடன், தாய்நாட்டை பாதுகாப்பதற்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்னவும் கைதுசெய்யப்பட்டு நேற்றையதினம் இரவே ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, சட்டவிரோதமாக கூட்டம் கூட்டியமை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு காயம் ஏற்படுத்தியமை பொலிசாருக்கு கடமைகளை செய்ய இடையூறு விளைவித்தமை, நீதிமன்ற உத்தரவை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான உத்தரவிட்டுள்ளார்.

நாமல் உட்பட ஆறு பேரும் கடும் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறைச்சாலை வாகனத்தில் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு எதிரணியின் ஆதரவாளர்கள் வீதிகளில் டயர்களை போட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை நீடித்துள்ளன. தங்காலையிலுள்ள சிறைச்சாலைக்கு நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேரையும் அழைத்துச் செல்வதைத் தடுக்கும் வகையிலேயே இந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், தீ அணைக்கும் படையினரும் வரவழைக்கப்பட்ட தடைகள் அகற்றப்பட்ட நாமல் உள்ளிட்ட கூட்டு எதிரணியினர் ஆறு பேரும் தங்காலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஹம்பாந்தோட்டை பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் நேற்றயை தினமும் போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்ததாகத் தெரிவிக்கும் ஹம்பாந்தோட்டை பொலிசார் இந்தத் தடையையும் மீறி வீதிகளில் டயர்களைப் போட்டு எரித்து போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

ஏற்கனவே ஹம்பாந்தோட்டை இந்தியத் துணைத் தூதரகத்திற்கு எதிரில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 28 பேரும், நேற்றும் நேற்று முன்தினமும் கைதுசெய்யப்பட்ட ஆறு பேருமாக மொத்தம் 34 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

123Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*