அரசியல்கைதிகளை ஆயுள்வரை சிறைவைத்திருக்கும் உத்தேசமா?

4

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவர் ஆரம்பித்திருக்கும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் பதினாறாவது நாட்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அம்மூவரும் அனுஷ்டித்து வந்த உண்ணாவிரதம் நேற்றுமுன்தினம் காலையுடன் பதினைந்தாவது நாளை எட்டியதையடுத்து, தாங்கள் அருந்தி வந்த குடிநீரையும் அவர்கள் நிறுத்திக் கொண்டனர். இதன் காரணமாக அவர்களது உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது. இதனையடுத்து அம்மூவரும் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களின் உயிரைக் கப்பாற்றுவதற்காக சிகிச்சை வழங்கப்பட்டது.

அம்மூவரும் நீண்ட நாட்களாக உண்ணாவிரதம் அனுஷ்டித்து வருவதனால் அவர்களது சிறுநீரகங்கள் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளதாக நேற்றுமுன்தினம் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. மேற்படி அரசியல்கைதிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததாகவும் அன்றைய தகவல்கள் தெரிவித்தன.

நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளில் இம்மூவரும் அடங்குகின்றனர்.

இவர்களது வழக்குகள் வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென்று அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. இம்முடிவை மாற்றி தங்களது வழக்குகளை மீண்டும் வவுனியாவுக்கு மாற்றுமாறு கோரியே இக்கைதிகள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இதுஒருபுறமிருக்க, தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்யக் கோரும் போராட்டங்கள் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நேற்று பதினேழு அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. மூன்று தமிழ்க் கைதிகளுக்கும் ஆதரவாக கொழும்பு மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருப்பதால் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரமானது மேலும் பூதாகரமாகக் கூடிய அறிகுறியே தென்படுகின்றது.

தமிழ் அரசியல்கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென்ற தீர்மானமொன்றை வடமாகாண சபையும் சமீபத்தில் நிறைவேற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளின் எண்ணிக்கையானது 200 ஐ விட அதிகமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் அநேகமானவர்கள் கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக சிறைகளில் வாடுகின்றனர். இளமைப் பருவத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், தற்போது முதுமைப் பருவத்தை எட்டிய நிலையில் உள்ளனர். கல்வி வாய்ப்பு, இல்லற வாழ்க்கை, குடும்ப உறவுகள் என்றெல்லாம் அத்தனை மகிழ்ச்சிகளையும் தொலைத்தவர்களாக சிறைக்குள்ளேயே அவர்களது வாழ்வு கழிகின்றது. ஆயுள்வரை சிறைக்குள்ளேயே காலத்தைக் கழிக்க வேண்டி வரலாமென்பதே இக்கைதிகளின் ஏக்கம்!

விடுதலைப் புலிகள் பற்றிய தகவல் தெரிந்திருந்தும் அரசுக்குத் தெரிவிக்கத் தவறியமை, புலிகளுக்கு சிறுசிறு உதவிகளை தெரிந்தோ தெரியாமலோ வழங்கியமை, புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்தமை என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிலரது வழக்குகள் அவ்வப்போது விசாரணைக்கு வருகின்றன. பலரது வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதே இல்லை. குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கான சாட்சிகளோ, ஆதாரங்களோ, சான்றுகளோ இல்லாத நிலையில் அவர்களது வழக்குகளை எவ்வாறு முன்கொண்டு செல்வதென்பதுதான் முக்கிய பிரச்சினை!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் கூட பதினைந்து வருடங்கள் கழிந்ததும் விடுதலையாகி வெளியே வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாத தமிழ் சந்தேகநபர்களான இவர்கள், ஆயுள் தண்டனைக் காலத்தையும் தாண்டி 25 வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள கொடுமை இலங்கையில்தான் தொடருகின்றது. அவ்வாறாயின் தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்தை அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று குறிப்பிடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு எட்டு வருடங்கள் பூர்த்தியடைந்து விட்டது. சரணடைந்த விடுதலைப் புலிகள் பலருக்கு ஏற்பட்ட கதி என்னவென்று தெரியவில்லையென பரவலாக எழுகின்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, ஒரு தொகுதி விடுதலைப் புலிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அன்றைய காலத்தில் புலிகளின் தளபதிகளாக செயற்பட்டோர் தற்போது ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தபடி, அரசியலும் பேசுகின்றனர்.

ஜனாதிபதியின் வசமுள்ள நிறைவேற்று அதிகாரத்தினால் கிடைத்த பொதுமன்னிப்பு மூலமே இவையெல்லாம் சாத்தியமாகின. ஆனாலும் தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வதில் எந்தவொரு அரசியல் அதிகாரமும் இதுவரை கைகொடுக்கவில்லை என்பது பெரும் வேதனை.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக விளங்குகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் இவ்விடயத்தில் தனது செல்வாக்கை அரசு மீது செலுத்தத் தவறி விட்டதென்ற பெரும் மனக்குறை தமிழ் மக்களுக்கு உண்டு.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனித்துப் போய்விட்டது. அன்றைய தீவிரவாத கோட்பாடுகளும் மறைந்து போய் விட்டன. அவ்வாறிருக்கையில் தமிழ் அரசியல்கைதிகளை, உள்நாட்டு யுத்தத்தின் அடையாளமாக இன்னுமே சிறைக்குள் பேணி வைத்திருப்பது நியாயமானதா என்பதையிட்டு ஒவ்வொரு தரப்பும் மனிதாபிமான ரீதியில் சிந்திக்க வேண்டியது அவசியம்.