மஹிந்தவின் ஆட்சி இனி கனவிலும் நடக்காது! கொழும்பில் இருந்து ஓர் தகவல்

11
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

மருத்துவ சங்க பிரச்சினைகளை, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் வரையில் கொண்டு செல்லலாம் என சிலர் முயற்சி செய்து வருகின்றனர் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

சைட்டம் எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் மாணவர்களை விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக மிரட்டியே அழைத்துக் கொண்டு செல்கின்றார்கள்.

அரசியல் இலாபங்களுக்காக மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.

இவ்வாறான போராட்டங்களுக்கு மாணவர்கள் விரும்புவதில்லை எனினும் வற்புறுத்தலின் காரணமாகவே அவர்கள் போராட்டங்களிலும், பாதயாத்திரைகளிலும் கலந்து கொள்கின்றனர்.

இந்த செயற்பாடுகளில் பின்னணியில் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இதனுடன் தொடர்புபட்டவர்கள் யார்? யார்? என்ற தகவல்கள் முழுவதனையும் நாம் தற்போது திரட்டியுள்ளோம்.

அதன் அடிப்படையில் இதற்கு தீர்வு காணும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் கூடிய விரைவில் மருத்துவ சங்கப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகள் எட்டப்படும்.

அதேபோல, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியினைப் பிடிப்பார் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது இனி எப்போதுமே கனவிலும் நடைபெறாத ஒன்று.

கடந்தகால ஆட்சியில் கோட்டாபய ராஜபக்ஷ இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார் அதன் காரணமாகவே அந்த ஆட்சி வீழ்ச்சியடைந்தது எனவும் ராஜித தெரிவித்துள்ளார்.