தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் நாடகம் அம்பலம்

6
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

கடந்த 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக, இலங்கை கடற்படையினர் போலியான தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, இன்று (திங்கட்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம் தகவல் கோரப்பட்டிருந்த நிலையில், உண்மைக்கு புறம்பான தகவல்களையே வழங்கியுள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில், இவ் வழக்கில் கைதுசெய்யப்பட்ட கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடத்தப்பட்ட குறித்த இளைஞர்கள், கடற்படையினரால் திருகோணமலை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே தமது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

அத்தோடு, கடற்படையின் லெப்டினன்ட் ஜெனரல் தரத்திலான அதிகாரி ஒருவர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, இவ் இளைஞர்கள் அனைவரும் பணத்திற்காகவே கடத்தப்பட்டனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.