பொலிஸ் ஹீரோ இவர்தான்.

யாழில் கர்ப்பிணிப் பெண்ணோடு சிசுவின் உயிரையும் காப்பாற்றிய பொலிஸ் ஹீரோ இவர்தான்!! சமூக வலைத்தளங்களில் குவியும் பாராட்டுக்கள்

கடமைக்காக அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தத்தமது கடமைகளை மறந்து சுயநலத்திற்காக அலையும் இன்றைய காலத்தில் கடமையிலும் மனிதாபிமானத்தை தமிழ் மக்களுக்கு சொல்லிக்கொடுத்துள்ளனர் வட்டுக்கோட்டை பொலிஸார்.

சில தினங்களுக்கு முன்னர் வட்டுக்கோட்டை பகுதியில் நள்ளிரவை அண்மித்த நேரத்தில் பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை அவரது கணவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மழலை கிடைக்கவுள்ள சந்தோசத்திலும் தனது மனைவியின் வேதனையை கண்டு பதைபதைத்து அந்த நிசப்த நேரத்தில் தனது ஊரிலுள்ள முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அழைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புறப்பட்டுள்ளார்.

ஓட்டோவும் இருவரையும் சுமந்தவாறு யாழ்.போதனா வைத்தியசாலையை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த வேளையில் திடீரென அந்த முச்சக்கர வண்டி இயந்திர கோளாறு காரணமாக நடுவீதியில் நின்றுள்ளது. சாரதியும் தன்னால் இயலுமானவரை அதனை மீளியக்க முயன்று தோற்றுப்போக அவர்களது வைத்தியசாலை நோக்கிய பயணம் கேள்விக் குறியானதுடன் குறித்த பெண்ணின் பிரசவமும் மரணத்தின் தறுவாய்க்கு சென்றது.

அப்போதுதான் ஆபத்பாண்டவராக வட்டுக்கோட்டையின் பாதுகாப்பை கண்காணித்து தமது வாகனத்தில் தற்செயலாக குறித்த முச்சக்கர வண்டியருகே பொலிஸாரது வாகனம் சென்றடைந்தது. அப்போதுதான் அந்த பரிதவிப்பை கண்டுள்ளார் வட்டுக்கோட்டை பிரதேச பொலிஸ் அதிகாரி.

கண்டிப்பான தனது கடடையிலும் மனிதாபிமானத்தை கையிலெடுத்த அந்த அதிகாரி சடுதியாக தனது வாகன சாரதிக்கு குறித்த பெண்ணை ஏற்றி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பாக தனது இரண்டு பொலிஸாரையும் கூடவே அனுப்பிவைத்துள்ளார் அந்த பொறுப்பு மிக்க பொலிஸ் அதிகாரி.

பிரசவ வலியால் துடிதுடித்த அந் பெண்ணையும் அவரது கணவரையும் ஏற்றி கடுகதியில் பறந்துசென்றது பொலிஸாரின் வாகனம் யாழ் போதனா வைத்தியசாலையை நோக்கி. 

ஆனாலும் வாகனம் செல்லும் வழியில் அந்த பெண்ணுக்கு பிரசவம் நிகழ்ந்துவிட தமது பொலிஸ் பயிற்சியின் மூலம் கற்றுக்கொண்ட முதலுதவி சிகிச்சைகள் மூலம் அந்த பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றி யாழ் போதனா வைத்தியசாலையிடம் கையளித்தனர் பொலிஸார்.

இந்நிலையிலேயே யாழ் குடாநாட்டில் மட்டுமல்ல தமிழர் வாழும் தேசமெங்கும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் மனிதாபிமானமும் சமூக அக்கறையும் பரவி வியாபித்தது.

சிங்கள பொலிஸாரும் இராணுவத்தினரும் தமிழ் மக்களிடையே தவறானவர்கள் என்ற தோற்றப்பாடு நிலவியிருந்த காலத்தில் தாம் அவ்வாறானவர்கள் அல்லர் என்றும் தமக்கு இந்நாட்டின் அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் என்றும் இனவாதத்தை பரப்பிவரும் தரப்பினருக்கு மனிதாபிமானத்தை சொல்லிலல்ல செயலிலும் எடுத்துக்காட்டியுள்ளனர் இந்த வட்டுக்கோட்டை பொலிஸார்.

0Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*