விஜய் படத்துக்கு `மெர்சல்’க்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

4
பொது அறிவுப்போட்டி 2018Sltnews

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் தயாரிப்பு, வெளியீடு, விளம்பரம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைக்கும் ‘மெர்சல்’ எனும் பெயரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அனிதா சுமந்த் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில், வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி வரை இந்த்த் தடை நீடிக்கும் எனக் கூறி இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

ஏ.ஆர். ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனத்தின் சார்பில் மெர்சலாயிட்டேன் எனும் பெயரை பதிவு செய்து திரைப்படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடுத்திருந்த வழக்கில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கிற்காக ராஜேந்திரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், மெர்சல் படத்திற்கு முன்பாகவே கடந்த 2014 ஆம் ஆண்டில், மெர்சலாயிட்டேன் எனும் பெயரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்து, படத்தின் தயாரிப்பு வேலை நடைபெற்று முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மெர்சல் மற்றும் மெர்சலாயிட்டேன் என்கிற இந்த இரண்டும் ஒரே அர்த்தம் கொடுக்கக் கூடியவை என்பதால், விஜய் நடிக்கும் படத்திற்கு ‘மெர்சல்’ எனும் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான இன்றைய விசாரணையில் தயாரிப்பாளர் ராஜேந்திரன் தரப்பிலான வாதத்தின் போது, மெர்சல் படத்திற்கு அப்பெயரை பதிவு செய்வதற்கு முன்னதாகவே மெர்சலாயிட்டேன் எனும் பெயரை தாங்கள் பதிவு செய்துள்ளதால், விஜய் படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என கோரப்பட்டது.

‘மெர்சல்’ திரைப்படம் – 6 சுவாரஸ்ய தகவல்கள்

‘மெர்சல்’: இந்தியா முழுவதும் வைரலாகும் முன்னோட்டக் காட்சி

இந்த விவகாரத்தில் மெர்சல் திரைப்பட தயாரிப்பாளர் தரப்புக்கு பதிலளிக்க நேரம் வழங்கிய உயர்நீதிமன்றம், அதுவரை ‘மெர்சல்’ பெயரின் பயன்பாட்டிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மெர்சல் படத்தின் முன்னோட்ட காட்சிகள், நேற்று வியாழக்கிழமை வெளியாகி, அது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் இந்த திரைப்படம் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 100 ஆவது படம் என்பதால், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவருகிறது.