விக்னேஸ்வரனை மிரட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Loading...

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு 2018 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால் எதுவுமே நடக்கவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு தீர்வு வரும் என்றார். 2017 ஆம் ஆண்டும் தீர்வு வரும் எனக் கூறினார். தற்போது 2018 ஆம் ஆண்டு முடிவடைதற்குள் தீர்வு சாத்தியமாகும் என நம்பிக்கைவேறு வெளியிட்டுள்ளார் சம்பந்தன், என்று சுட்டிகாட்டிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், அரசாங்கம் ஒன்றைக் கூறி மற்றொன்றைச் செய்வதாகவும் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ், நேற்று திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்தார்.

மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எதுவுமே பேசக் கூடாது என்றும், அந்த ஒற்றையாட்சி அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸ் தனக்கு புத்திமதி கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னார்.

கடந்தகால குட்டைகளைக் குழப்புகிறீர்கள். அவ்வாறு செயற்பட்டால் அது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் அல்லவா? என ஜேம்ஸ் கௌரிஸ் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.

அரசாங்கம் ஒன்றைக் கூறுகின்றது, மற்றொன்றைச் செய்கின்றதே. ஆகவே, நடக்கும் உண்மைகளை எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் தமிழர் தரப்புக்கு உண்டு என தான் கூறியதாகவும், அவ்வாறு தமிழர்கள் தமது பிரச்சினைகளை எடுத்துக்கூறினால், சிங்கள மக்களுக்கு ஏன் கோபம் வர வேண்டுமென்று புரியவில்லையே என ஜேம்ஸ் கௌரிஸிடம் பதிலக்கு கேள்வி ஒன்றை முன்வைத்ததாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை அரசிடம் இருந்து, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாக அறிந்து கொள்கொள்வதற்கும், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் உரிய குழுக்கள், மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டுமென்று ஜேம்ஸ் கௌரிஸ் கூறினார்.

ஆனால், அவ்வாறான ஒரு குழுவை அல்லது நீதிமன்றக் குழுவை இலங்கையில் ஏற்படுத்த முடியுமா? அது பற்றி சிந்திக்க வேண்டுமென்று ஜேம்ஸ் கௌரிஸிடம் பதிலுக்கு கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஆகவே, இலங்கை ஒற்றையாட்சி அரசின் மீதான இவ்வாறான சந்தேகங்கள் இருக்கும் நிலையில், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்று ஜேம்ஸ் கௌரிஸிடம் வலியுறுத்தியதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இறைமையுடன் கூடிய தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவ்வாறு பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பித் தாருங்கள் எனக் கேட்டால், சிங்கள மக்கள் தமிழர்களோடு கோபப்பட வேண்டிய அவசியமில்லை என ஜேம்ஸ் கௌரிஸிடம் மேலும் எடுத்துக் கூறியதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அதேவேளை மைத்திரி ரணில் அரசாங்கம், ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானம் உள்ளிட்ட பல விடயங்களை அமூல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் தாமதமடைவதை, ஜேம்ஸ் கௌரிஸ் ஒப்புக் கொண்டார் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.

51Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*