யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு ஆபத்து! புலனாய்வு பிரிவு எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா குழுவை போன்று தனுரொக் என்ற குழு ஒன்று தலைதூக்க முயற்சிப்பதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்றவர்களால் இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கொக்குவில் பொலிஸாரினால் தனுரொக் குழுவில் இருந்து 3 பேர் கைது செய்யப்பட்டதன் பின்னர் இந்த குழுவினர் தொடர்பில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் கொக்குவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் தனுரொக் குழுவினால் இரு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் காயமடைந்த இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவில், அருகல்மடம் பிரதேசத்தில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் கொண்ட குழுவினரால் வீதியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரிகள் வீதி போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த அதிகாரிகளினால் மோட்டார் சைக்கிள் மற்றும் அங்கிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு தொடர்புபட்டவர்கள் ஆவா குழு மற்றும் தனுரொக் குழுவின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இரு குழுக்களுக்கும் இடையில் பல முறை மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

53Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*