தமிழ் மன்னனின் கோட்டையில் விளக்கேற்றிய மேர்வின் சில்வா!

அநுராதபுரம் – இபபோலகம, பெலும்கல பகுதியில் புதிய கிராமத்தை நிர்மாணிக்க, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நாட்டிய அடிக்கல்லை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அகற்றியுள்ளார்.

தொல்லியல் சிறப்புமிக்க குறித்த இடத்தில் புராதன எச்சங்கள் அழிக்கப்பட்டு வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேர்வின் சில்வா கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தார்.

அவர் தனது குழுவினருடன் அங்கு சென்று வீடுகளை நிர்மாணிக்க நாட்டப்பட்டிருந்த அடிக்கல்லை அகற்றியுள்ளார்.

குறித்த இடம் அநுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும், துட்டகைமுனு என்ற சிங்கள மன்னனுக்கும் இடையில் இறுதியாக போர் நடைபெற்ற கோட்டை இருந்த பகுதி என நம்பப்படுகிறது.

அங்கு சென்ற மேர்வின் சில்வா, எல்லாளன் மன்னனின் பெலும்கல (பார்வையிடும் பாறை) என்று அழைக்கப்படும் என்ற கல் பாறையிலும் அங்கு வந்திருந்தவர்களின் உதவியுடன் ஏறியுள்ளார்.

பாறையில் ஏறிய மேர்வின் சில்வா, அங்கிருந்து முக்கியமான இடங்களை பார்வையிட முடியும் எனக் கூறியுள்ளார்.

விஜிதபுர கோட்டைக்கு அருகில் இந்த பெலும்கல பகுதியில் இருக்கும் பாஹன் கல (விளக்கு பாறை) என்ற இடத்தில் துட்டகைமுனு மன்னனுக்கு விளக்கேற்றி அவர் வழிபட்டுள்ளார்.

விஜிதபுர கோட்டையை தரைமட்டமாக்கியவர்களை பணியில் இருந்து நீக்கியமை மட்டுமல்ல அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசிய மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் துறைக்கு பொறுப்பான அமைச்சரும் தனக்கான பொறுப்பில் இருந்து விலக முடியாது எனவும், இந்த குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் யோசனை முன்வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அப்படி தண்டனை வழங்காவிட்டால் பிரதமர் இதில் குற்றவாளியாக மாறுவார் எனவும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

64Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*