மட்டக்களப்பில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த ஆதாரம் வெளியானது

இலங்கையில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த மலையொன்று இன்றும் உள்ளது. குசலான் மலை என்று அதற்குப் பெயர்.

இம்மலை தாந்தாமலை பிள்ளையார் ஆலயத்தையும் உகந்தமலை வள்ளிஅம்மனாலயத்தையும் நினைவுபடுத்துகின்றது.

உகந்தமலையைப் போல குசலான்மலை சுமார் 250அடி உயரமுடைய தட்டையான அமைப்புடைய குன்றாகும். 200அடி நீளமும் 100அடி அகலமும் உடைய இக்குன்றில் சுனைகள் பத்துக்கும் மேற்பட்ட குகைகள் காணப்படுகின்றன. படிக்கற்கள் காணப்படுகின்றன.

சிறப்பம்சங்கள்!

அங்கு பத்துக்கும் மேற்பட்ட குகைகள் உள்ளன. அவற்றில் ஆதி தமிழர் வாழ்ந்த எச்சங்கள் காணப்படுகின்றன. அங்கு 07 ஆதிதமிழரின் தமிழ்ப் பிராமி கல்வெட்டுக்கள் உள்ளதாக பிரபல தொல்லியலாளர் என்.கே.எஸ்.திருச்செல்வம் குறிப்பிடுகின்றார்.

புராதன கட்டடமொன்று காணப்பட்டதற்கான பழைய செங்கற்கள் அங்கு காணப்படுகின்றன. இங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த புதையல்கள் திரவியங்கள் புதையல்மீட்புக்காரர்களால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திசன் பெருமகன் தேவகுத்தன் அபயன் நாகன் சுதசனன் குத்தன் சுதினன் சமனன் கஹபதி போன்ற ஆதித் தமிழ்ப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

இங்கு ஆதி தமிழர்கள் வணங்கிய குலதெய்வம் வாழ்ந்த குகைகளையும் ஒரு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் சக பௌத்தர்களிடம் வழங்கியதாக பிராமி எழுத்துக்களில் கல்வெட்டுக்களில் பொறித்துள்ளனர்.

குசலான் எங்கே அமைந்துள்ளது?

மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதனவீதியில் 14கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனுமிடமுள்ளது. அங்குள்ள பிரதான சந்தி கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்தது.

அந்தச்சந்தியிலிருந்து மேற்காக கறுத்தபாலமூடாக மகாஓயா செல்லும் வீதியில் 13 கி.மீற்றர் தொலைவில் கரடியனாறு எனும் பழந்தமிழ்க்கிராமம் உள்ளது. இக்கிராமத்திலின் வடமேற்குத்திசையில் 3கி.மீற்றர் தூரத்தில் குசலான்மலை அமைந்துள்ளது.

இம்மலை உச்சியில் பண்டைய காலத்து வேல் தாங்கிய சிறுகோயில் இருந்தது. இந்தக்குசலான் மலைக்கும் அருகிலுள்ள 7 சிறுகுன்றுகளுக்கும் மத்தியில்தான் கரடியனாறுக்குளம் இயற்கையாக அமைந்துள்ளது.

முந்தெனி ஆற்றால் இக் கரடியனாறுக்குளம் இயற்கையாக உருவாகியதென்பது தெரிந்த விடயமே.

1948இல் இக்குளத்தின் அருகில் அணைக்கட்டுக்கள் கட்டி நீர்த்தேக்கமாகியது.

குசலான் மலையில் வேல் நாக வழிபாடு!

2000 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்த தமிழர்களின் வேல் வழிபாடும் நாக வழிபாடும் இருந்ததற்கான தடயங்கள் ஆதாரங்கள் நிறையவே உள்ளன. அங்கு நாகநாதருக்கு பூஜைசெய்த இடங்களை இன்றும் காணலாம். மலையடியில் கொத்துப்பந்தல் அமைத்து பொங்கலிட்டு இவ்வழிபாட்டைச் செய்துள்ளனர். இன்றும் பாம்புப்புற்றைக்காணலாம்.

அன்று கரடியனாற்றில் விவசாயம்செய்துவந்த தமிழ்மக்கள் வேல் வழிபாட்டையும் நாகவழிபாட்டையும் தொடர்ந்து செய்துவந்தனர்.

அங்கு மலையில் தற்போதுள்ள ஆலயம் 4 சிறு மண்டபங்களைக்கொண்டு காணப்படுகின்றது. இருபக்கங்களிலும் 4தூண்கள் வீதம் 8தூண்கள் காணப்படுகின்றன. கருவறையில் முருகப்பெருமான் வைக்கப்பட்டுள்ளார்.

கூடவே விநாயகரும் கற்சிலையாக வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் முருகனின் 3 வேலாயுதங்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் முருகப்பெருமானுக்கு திருவிழா எடுக்கப்படுகின்றது. ஆதித்தமிழன் வாழ்ந்த கரடியனாற்றில் இன்றும் தமிழன் வாழ்ந்து வருவது சிறப்பம்சமே.

305Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*