தமிழர் இடத்தில் புத்த கோவில் கட்டுவதற்கு புது காரணகதை சொல்லும் யாழ் தளபதி!

வெசாக் கொண்டாட்டத்திற்கு வந்த யாழ்ப்பாண மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கூட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கூட்டங்களிற்கு வருவதில்லை.

தமிழ் மக்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடகூடாதென்பதற்காகவே புத்தரின் போதனைகளை போதிக்கிறோம்.

எம்முடன் சேர்ந்து வேலைசெய்து, மக்கள் மனங்களை வெல்ல கஜேந்திரகுமார் முயற்சிக்க வேண்டுமென சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருக்கிறார் இராணுவத்தின் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன கெட்டியாராச்சி.

நேற்று புதன்கிழமை யாழ் மாவட்ட கட்டளை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தை பௌத்தமயமாக்குகின்ற செயற்பாடுகளில் இராணுவம் ஈடுபட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் குற்றம்சாட்டியது தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.

“புத்தபகவானின் போதனைகள் எந்தவொரு தனி மதத்திற்கும் சொந்தமானதல்ல. மனிதகுலம் முழுவதற்குமே பொதுமையானது.

மனிதாபிமானம், காருண்யம், அகிம்சை, சாந்தி, சமாதானம், சகிப்பு தன்மை, சகோதரத்துவம் ஆகிய உயரிய மானுட பண்புகளை இவை அடிப்படையாக கொண்டவை.

இன்னொரு வகையில் சொன்னால் வன்முறையற்ற அமைதியான வாழ்க்கைமுறைமையை இவை போதிக்கின்றன.

போர் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினராக வட, கிழக்கை சேர்ந்த தமிழ் உறவுகளே உள்ளனர்.

ஆனால் 2009 ஆண்டு போர் வன்முறைகளற்ற அமைதி சூழலில் ஓரளவு இயல்பு வாழ்க்கையை வாழ்கிறார்கள். வடக்கு கிழக்கில் அமைதி நீடிக்க வேண்டும். மீண்டும் வன்முறைகள் வெடிக்ககூடாது.

ஆகவேதான் வன்முறையற்ற வாழ்க்கைமுறையை அனைத்து தரப்பினருக்கும் பேணி, ஊக்குவித்து முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆகவேதான் வன்முறையற்ற வாழ்க்கை முறையை போதிக்கின்ற புத்தபகவானின் போதனைகளைசெவிமடுக்கவும், சிந்திக்கவும், பின்பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

எமது நாட்டின் தேசிய பண்டிகைகளில் வெசாக் பெருநாள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த காரணங்களால்தான் போருக்கு பிந்திய சூழலில் வெசாக் பண்டிகையை யாழ் மாவட்ட இராணுவத்தினர் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

ஆனால் நாம் வெசாக் பண்டியையை விளம்பரப்படுத்தவில்லை. பஸ்களில் ஆட்களை ஏற்றிவரவில்லை. அவர்களாகவே அறிந்து வந்து முழு மனதுடன் கலந்து கொள்கிறார்கள்.

மடை திறந்த வெள்ளம்போல மக்கள் கூட்டம் இதில் கலந்துகொண்டது. யாழ் மாவட்டத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் பொதுகூட்டங்களில் இதில் ஐந்தில் ஒரு பங்கு சனம்கூட பங்கேற்பதில்லை என்பதையும் நாம் அறிவோம்.

நிலைமை அவ்வாறு இருக்க, யாழ் மாவட்டத்தை இராணுவம் பௌத்தமயமாக்கி வருகிறதென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அபாண்டமாக குற்றம்சுமத்தி வருகிறது.

இவர்களை போன்றவர்களால் யாழ் மாவட்டத்தில் மக்களின் மனங்களை வெல்ல முடியாமல் உள்ளது. பெருந்தொகை மக்களின் பங்கேற்புடன் எந்தவொரு நிகழ்வையும் நடத்த முடியாமல் உள்ளது.

நான் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்திக்கின்றபோது, எதற்காக வதந்திகளை கட்டவிழ்த்து விட்டு யாழ் மாவட்ட மக்களை பிழையாக வழிநடத்திக் கொண்டேயிருப்பதில் சந்தோசமடைகிறீர்கள் என கேட்கவுள்ளேன்.

யாழ் மக்களின் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை இராணுவத்துடன் சேர்ந்து முன்னெடுத்து மக்கள் மனங்களில் இடம்பிடியுங்கள் என்று ஆலோசனை சொல்லவுள்ளேன் என்றார்.

58Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*