புலிகளின் பாணியிலேயே நகரசபையை கைப்பற்றியது ஈ.பி.ஆர்.எல்.எவ்!

வவுனியா நகரசபையை தமிழர் விடுதலைக்கூட்டணி இன்று கைப்பற்றியுள்ளது. இந்த நகர்வை அவர்கள் கிட்டத்தட்ட ஒரு கெரில்லா தாக்குதல் போலவே நிகழ்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிசாளரை நிறுத்தும் திட்டம் தம்மிடம் இறுதிவரை இல்லையென்பதை போல காண்பித்து, சபா மண்டபத்திற்குள் நுழைந்ததும் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்தவகையான நகர்வுகளிற்கு பெயர் பெற்ற ரிசாட் பதியுதீனும் அவர்களுடன் கைகோர்க்க, வவுனியாவில் உள்ள வயதான தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் மொத்தமாக மண்கவ்வியுள்ளனர்.

நேற்றிரவு தமிழ் பக்கம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திய பேச்சுக்களில் சிவசக்தி ஆனந்தன் நேரடியாக பங்குபெற்றவில்லை. மாறாக கூட்டமைப்பை பதிவுசெய்ய வேண்டும், எல்லா தலைவர்களும் சந்திக்க வேண்டுமென நிபந்தனை விதித்தார். அதை கூட்டமைப்பின் தலைவர்கள் ரசிக்கவில்லை. ஆகவே, போகவில்லை.

கூட்டமைப்பின் தலைவர்கள் பேச்சிற்கு வரவில்லை, அதனால் நாம் மாற்றுவழியை கையாண்டோம் என காண்பிக்க, அந்த நகர்வை அவர்கள் செய்யலாமென நேற்று எச்சரித்திருந்தோம். இன்று அதுதான் நடந்தது.

நகரசபை தலைவர் பதவி தமக்குத்தான் என்றுதான் கூட்டம் ஆரம்பிக்கும் வரையும் த.தே.கூ நினைத்திருந்தது. ஆனால் ரிசாட் பதியுதீன், மற்றும் சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களுடன் இரகசிய திட்டமொன்றை தீட்டி, அதை கச்சிதமாக முடித்துள்ளது சிவசக்தி ஆனந்தன் தரப்பு.

வவுனியா நகரசபை தவிசாளராக தமிழர் விடுதலைக்கூட்டணியின் கௌதமன் தெரிவாகியுள்ளார். அவருக்கு 11 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் சேனாதிராசாவிற்கு 9 வாக்குகளும் கிடைத்தன.

வவுனியாவில் ஐ.தே.கவின் நேரடி வேட்பாளர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தார். ரிசாட் பதியுதீனின் கீழ் ஐ.தே.கவின் கீழ் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் த.வி.கூவை ஆதரித்தனர். சுதந்திரக்கட்சி மொத்தமாக த.வி.கூவை ஆதரித்தது. ஈ.பி.டி.பியும் த.வி.கூவை ஆதரித்தது.

பிரதி தலைவர் தெரிவிலும் இதே கூட்டணிதான் நீடித்தது. பிரதி தலைவர் சுதந்திரக்கட்சிக்கும், ஐ.தே.கவிற்கும் சுழற்சி அடிப்படையில் என்ற உடன்பாட்டின் அடிப்படையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டதாக தெரிகிறது.

பிரதி தலைவராக சுதந்திரக்கட்சியின் குமாரசாமி தெரிவானார். அனைத்து வாக்கெடுப்புக்களும் பகிரங்கமாகவே நடந்தன.

மன்னார் மாந்தை பிரதேசசபை தவிசாளர் தேர்வில் என்ன நடந்ததென்பதை நேற்றிரவு குறிப்பிட்டு, ஒரு எச்சரிக்கையை தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. த.தே.கூ உடன் இணக்கமான பேச்சை இறுதிவரை நடத்தி, கூட்டமைப்பை சுதாரிக்கவிடாமல் செய்து, இறுதிநேரத்தில் அதிரடி தாக்குதல் நடத்தும் உத்தியையே (அனேகமாக விடுதலைப்புலிகளின் பாணி) கையாண்டார்கள்.

மன்னாரில் இந்த பேச்சுக்களை கையாண்டு, கையை சுட்டுக்கொண்ட ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றிரவு கூட்டமைப்பின் தலைவர்களிடம் தனது அனுபவத்தை குறிப்பிட்டு, எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென குறிப்பிட்ட தகவலையும் இந்த சமயத்தில் குறிப்பிடுகிறோம்.

யாழ்ப்பாணத்தில் தேசிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்த த.தே.கூ, வவுனியாவில் மட்டும் ஏன் திடீர் புனிதர் வேடம் போட்டது என்பது வவுனியா நகரசபை த.தே.கூ உறுப்பினர்களின் கோபம். தவிசாளர் தேர்விற்கு கண்காணிப்பு விஜயம் செய்த சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம் ஆகியோரை மொய்த்த உறுப்பினர்கள் இதை குறிப்பிட்டு தர்க்கத்தில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.

10Shares

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*