பேரவையில் ஓரங்கட்டப்படும் கஜேந்திரகுமார்! போய் வாருங்கள் என வழியனுப்பிய விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையில் பெரும் உடைவு ஏற்படுமென தெரிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி விரைவில் வெளியேறலாம் என தெரிகிறது. அவர்களை வெளியேற்றும் இரகசிய முயற்சியொன்றையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ளார்.

Loading...

நேற்றைய தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், முதலமைச்சரும் இணைந்து செயற்பட எந்த சந்தர்ப்பத்திலும் வாய்ப்பில்லை என்பதை பலர் முன்பே கூறியிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் தனக்கு ஒத்துவருமென முதலமைச்சர் நினைக்கவில்லை.

ஒரு இடைக்கால ஏற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவைக்குள் முன்னணி இணைக்கப்பட்டது. முதல்வரும் ஆரம்பத்தில் இந்த இணைவை அனுமதித்திருந்தார்.

தனக்கு பொருத்தமான சமயத்தில் மாற்று அணியொன்றை கட்டியெழுப்புவதே முதலமைச்சரின் நோக்கம். எனினும், கடந்த தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சடுதியான வெற்றியை பெற்றது, முதல்வரை விழிப்படைய வைத்துள்ளது.

மாற்று அணிக்கான வாய்ப்பை, முன்னணி கைப்பற்றிவிடலாம் என்பதால், தனக்கும் முன்னணிக்குமிடையில் ஒத்திசைவு இல்லையென்பதை காண்பிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஆரம்பித்துள்ளார்.

நேற்று தமிழ் மக்கள் பேரவை அறிவித்த செயற்குழுவில் பதினொரு பேர் நியமிக்கப்பட்டனர். அதில் கட்சி சார்ந்த யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன அதிருப்தியடைந்துள்ளன. (நேற்றைய கூட்டம் முடிந்த கையுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ் தினக்குரல் நிருபரை தொடர்புகொண்டு, தமிழ் மக்கள் பேரவை பிழையான பாதையில் செல்கிறதென தகவல் கொடுத்தார். அந்த செய்தியை வெளியிடும்போது தனது பெயரை பாவிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்)

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து மக்கள் முன்னணியை அப்புறப்படுத்தவே முதலமைச்சர் இந்த முடிவை எடுத்திருந்தார்.

அதேசமயம், தமது அமைப்பை பலப்படுத்த ஐங்கரநேசன், அனந்தி, அருந்தவபாலன் ஆகியோரையும் உள்ளீர்த்தார். நேற்று தனிப்பட்ட காரணங்களால் அருந்தவபாலன், அனந்தி ஆகியோர் கூட்டத்திற்கு வரவில்லை.

இதேவேளை, செயற்குழுவில் நியமிக்கப்பட்ட ஒருவர்- அவர் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்- அதிலிருந்து ஒதுங்கப்போவதாக கூட்டத்தில் அறிவித்தார். முன்னணியை உள்ளீர்க்காத அதிருப்தியிலேயே இதை அறிவித்தார்.

உடனடியாக முதல்வர், “சரி அப்படியானால் நீங்கள் போகலாம். ஆனால் திருகோணமலையில் நடக்கும் பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் ஒதுங்கிக் கொள்ளுங்கள்“ என்று முகத்திலடித்தாற்போல கூறினார்.

சட்டத்தரணி புவிதரனும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர். அவரும் நேற்று அதிருப்தியுடன் உரையாற்றியதை அவதானிக்க முடிந்தது.

நடந்த நிகழ்வுகளை தொகுத்து பார்க்கும்போது, விரைவில் பேரவையிலிருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேறுமென தெரிகிறது. இதே வழியை ஈ.பி.ஆர்.எல்.எவ் உம் பின்பற்றலாம்.

0Shares

Advertisement

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*